தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக கூறி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி:
கல்லூரி மாணவி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பவுன்ராஜ். அவருடைய மகள் அனுரத்திகா ஸ்ரீநிதி (வயது 20). இவர், தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலையில், அனுரத்திகா ஸ்ரீநிதி தோட்டத்துக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய பெற்றோர், தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அங்கு வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அனுரத்திகா ஸ்ரீநிதி தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உறவினர்கள் மறியல்
இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராம மக்கள் தேனி-மதுரை சாலையில் அமர்ந்து நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு
இதுகுறித்து தகவலறிந்த தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாணவியின் சாவுக்கு காரணம் தெரியும் வரை மறியலை கைவிட மாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கலைந்து செல்லாமல் இருந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில், நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் தேனி-மதுரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மருத்துவமனையில் தர்ணா
இதற்கிடையே கிராம மக்கள், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பிேரத பரிசோதனை செய்த மாணவியின் உடலை வாங்க மறுத்தனர். தொடர்ந்து அவர்கள் மருத்துமனை முன்பு தேனி-மதுரை சாலையில் மீண்டும் மறியலில் ஈடுபட திரண்டனர்.
அவர்களை மருத்துவமனை வளாகத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மருத்துவமனைக்குள் அவர்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்பு சிறிது நேரத்தில் அங்கு இருந்து கலைந்து சென்றனர். மீண்டும் டி.பொம்மிநாயக்கன்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை கலைந்து போக செய்தனர்.
Related Tags :
Next Story