கோவை பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் விபத்து கார் மோதி வணிக வரித்துறை ஊழியர் பலி
கோவை- பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் கார் மோதிய விபத்தில் வணிக வரித்துறை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
கிணத்துக்கடவு
கோவை- பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் கார் மோதிய விபத்தில் வணிக வரித்துறை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வணிகவரித்துறை ஊழியர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மோதிராபுரம் அருகே ஜெகஜீவராம் வீதியை சேர்ந்தவர் சித்திரகுமார் (வயது 45). இவர் பொள்ளாச்சி வணிகவரித்துறையில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு லதாடெய்சிராணி (41) என்ற மனைவியும், தமிழ்மணி, செவந்தமணி (19) மகாலட்சுமி (17) என்ற 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் தமிழ்மணி கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் சக்தி நகரில் குடியிருந்து வருகிறார்.
சித்திரை குமார், லதாடெய்சிராணி, மகாலட்சுமி, உறவினர் ராஜசேகர் ஆகியோர் காரில் கிணத்துக்கடவு அருகே சிக்கலாம் பாளையத்தில் சக்தி நகரில் உள்ள மூத்த மகள் தமிழ்மணி வீட்டிற்கு சென்றனர்.
கார் மோதியது
சிறிது நேரம் கழித்து லதாடெய்சிராணி கணவர் சித்திரகுமாரை மகள் தமிழ்மணி வீட்டில் விட்டுவிட்டு அதே காரில் கிணத்துக்கடவு அருகே உள்ள ஏழுர் பிரிவில் ஜாதகம் பார்க்க சென்றார். பின்னர் அவர் மீண்டும் பொள்ளாச்சி செல்ல கோவை- பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் அரசம்பாளையம் பிரிவில் காரை நிறுத்திவிட்டு, இங்கு வரும்படி சித்திரைகுமாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சித்திரகுமார், ஜெயபிரகாஷ் என்பவருடன் பைக்கில் வந்து பொள்ளாச்சி கோவை ரோட்டில் அரசம்பாளையம் பிரிவு விநாயகர் கோவில் முன்பு இறங்கி எதிரே உள்ள காருக்கு செல்ல ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த கார் சித்திரகுமார் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த லதாடெய்சிராணி, மகாலட்சுமி ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
பின்னர் அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சித்திரைகுமாரை மீட்டுசிகிச்சைக்காக ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சித்திரகுமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story