பொள்ளாச்சியில் அரசு பள்ளி வகுப்பறைக்குள் கல்வீச்சு குழாய் உடைப்பு
பொள்ளாச்சி வடுகபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வகுப்பறைக்குள் கற்களை வீசியதோடு, கழிப்பிடத்தில் குழாய்களை உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வடுகபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வகுப்பறைக்குள் கற்களை வீசியதோடு, கழிப்பிடத்தில் குழாய்களை உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழாய் உடைப்பு
பொள்ளாச்சி வடுகபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் 129 பேரும், மாணவிகள் 102 பேரும் சேர்ந்து மொத்தம் 231 பேர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் வந்தனர். இதற்கிடையில் பள்ளி தலைமை ஆசிரியையின் அருகில் உள்ள வகுப்பறைக்குள் கற்கள், செங்கல் வீசப்பட்டு கிடந்தது. இதை வகுப்பறைக்குள் சென்ற மாணவ-மாணவிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கழிப்பறைகளில் உள்ள குழாய்கள் உடைக்கப்பட்டு, தண்ணீர் வீணாகி கொண்டிருந்தது. ஒரு கழிப்பிடத்தில் பெரிய கல்லை வீசி சேதப்படுத்தப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
நகராட்சி தலைவர் ஆய்வு
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் நகராட்சி தலைவர், ஆணையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் தலைவர் சியாமளா, ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தனர். சேதமடைந்த வகுப்பறை, கழிப்பிடம் மற்றும் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது தி.மு.க. நகர பொறுப்பாளர் வடுகை பழனிசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன், வக்கீல் கிரி மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர். இதுகுறித்து நகராட்சி தலைவர் சியாமளா கூறுகையில், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க பள்ளி சுற்றுச்சுவரின் உயரம் உயர்த்தப்பட்டு, இரவு நேர காவலர் நியமிக்கவும், அதேபோன்று அனைத்து நகராட்சி பள்ளிகளில் ஆய்வு செய்து, தேவையான பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இதற்கிடையில் பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா ஆகியோர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வடுகபாளையம் பகுதியில் கஞ்சா, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. போதைக்கு அடிமையான நபர்கள் இரவு நேரங்களில் பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே போலீசார் வடுகபாளையம் பகுதியில் கஞ்சா, மதுபாட்டில்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story