மாணவ மாணவிகளின் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள்
வால்பாறையில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவ-மாணவிகளின் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள் என்று பெற்றோர்களுக்கு, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
வால்பாறை
வால்பாறையில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவ-மாணவிகளின் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள் என்று பெற்றோர்களுக்கு, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
மேலாண்மை குழு கூட்டம்
வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பெற்றோர்களை பள்ளி நிர்வாகிகள் வரவேற்றனர். பெற்றோர்களிடம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பேசும் போது கூறியதாவது:- பிள்ளைகளின் கல்வி நலனில் பெற்றோர்கள் பெரியளவில் அக்கறை காட்ட வேண்டிய காலத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள். நாளுக்கு நாள் சமூக வளைதலங்கள் பெருகி வரும், இந்த சூழ்நிலையில் பிள்ளைகள் வழிதவறிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மாணவ-மாணவிகளின் கல்வி நலனில் ஆசிரியர்களாகிய நாங்கள் எவ்வளவு தான் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் பெற்றோர்கள் கட்டாயம் அக்கறை காட்ட வேண்டும்.
செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள்
பள்ளிக்கூடங்களுக்கு உங்கள் பிள்ளைகள் வரக்கூடிய நேரம் திரும்பி வீடுகளுக்கு வரக்கூடிய நேரம் கண்காணியுங்கள். அன்றாடம் பள்ளியில் நடைபெற்ற விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மாதத்தில் 2 முறையாவது உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளி கூடத்திற்கு வாருங்கள். தலைமைஆசியர் உட்பட அனைத்து ஆசியர்களையும் சந்தித்து பேசுங்கள். எந்த பாடங்களில் மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுங்கள், சிறப்பு வகுப்புகள் தேவைப்பட்டாலும் நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
குறிப்பாக பெண் பிள்ளைகளை சிறப்பான முறையில் கண்காணியுங்கள். செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள். யாருடனும் மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு அனுமதிக்காதீர்கள். பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்களை அடிக்கடி பாருங்கள். தங்களின் குழந்தைகளின் செயல்பாட்டில் சந்தேகம் வந்தால் உடனே பள்ளி கூடத்திற்கு வந்து ஆசியர்களை சந்தித்து பேசவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண்டிப்பதில் தயவு காட்டாதீர்கள்
இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:- நாங்கள் உங்களை நம்பி எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கிறோம். அவர்களின் ஏதாவது ஒரு செயல்பாட்டில் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனே எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் தொடர்பு கொள்வதற்கு வசதியாக டைரியை பராமரிக்கும் முறையை நடைமுறை படுத்துங்கள். தினந்தோறும் பெற்றோர்களிடம் அந்த டைரியில் கையெழுத்து வாங்கி வரச் சொல்லுங்கள். சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக இருந்தால் அதை டைரியில் குறித்து கொடுத்து பெற்றோரிடம் அனுமதி பெற்று வரச் சொல்லுங்கள். எங்கள் பிள்ளைகளை கண்டிப்பதில் தயவு காட்டாதீர்கள். படிப்பும் ஒழுக்கமும் மட்டுமே முக்கியம் என்பதை உணர்த்துங்கள். தற்போது பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவதால் ஆசிரியர்கள் இது குறித்து அதிகம் அக்கறை காட்டுங்கள். மாணவிகள் பலரும் காதல் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. எனவே மாணவிகளின் நடவடிக்கையில் வித்தியாசமான நிலை காணப்பட்டால் உடனே தெரிவியுங்கள். ஒவ்வொரு வகுப்பிலும் வாரத்திற்கு ஒரு முறையாவது கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த கூட்டத்தில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story