காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் வாரம் தோறும் நடைபெறும் என்று மேயர் தெரிவித்தார்.
காஞ்சீபுரம் பெருநகராட்சியானது தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தி நகர்ப்புற தேர்தலையும் தமிழக அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டு மக்களும் தங்கள் குறைகளை நேரடியாக மேயரிடம் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முதல் காஞ்சீபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் உள்ள பொதுமக்களின் மனுக்களை பெற்று மேயர் மகாலட்சுமி யுவராஜ் குறை தீர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாம் வாரம் தோறும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
முதல் நாளான நேற்று காஞ்சீபுரம் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி போன்ற கோரிக்கைகள் உள்ளடங்கிய மனுக்களை மேயர் மகாலட்சுமி யுவராஜிடம் வழங்கினர்.
மனுக்களை பெற்றுகொண்ட மேயர் உடனடியாக பரிசிலினை செய்து கையொப்பமிட்டு இந்த மனுக்களுக்கான தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாநகராட்சியின் துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story