அழிவின் விளிம்பில் மண்பாண்ட தொழில்


அழிவின் விளிம்பில் மண்பாண்ட தொழில்
x
தினத்தந்தி 22 March 2022 7:18 PM IST (Updated: 22 March 2022 7:18 PM IST)
t-max-icont-min-icon

நெகமம் பகுதியில் அழிவின் விளிம்பில் மண்பாண்ட தொழில் உள்ளது. இதனால் கைவினைக் கலைஞர்கள் கவலையில் உள்ளார்கள்.

நெகமம், மார்ச்.23-
நெகமம் பகுதியில் அழிவின் விளிம்பில் மண்பாண்ட தொழில் உள்ளது. இதனால்  கைவினைக் கலைஞர்கள் கவலையில் உள்ளார்கள். 

மண்பாண்ட தொழில் 

கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் செட்டியக்காபாளையம், கப்பிணிபாளையம், ஆவலப்பம் பட்டி, கொல்லபட்டி, கோதவாடி அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு பகுதியிலும் 5-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழில் செய்து வந்தன. தற்போது மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக இளைய தலைமுறையினர் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் ஆர்வம் காட்டுவதில்லை. 
இதனால் ஊருக்கு ஒன்று அல்லது 2 குடும்பத்தினர் மட்டுமே மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மண்ணால் செய்யப்படும் பானைகள், சாமி சிலைகள், தலைவர்கள் சிலைகள், பொம்மைகள் செய்வதில் போதிய ஈடுபாடுகள் இல்லை. இதன்காரணமாக இந்த தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது.

போதிய வருமானம் கிடைப்பதில்லை

இதுகுறித்து கைவினைக் கலைஞர்கள் கூறியதாவது:- நெகமம் பகுதியில் ஏராளமான குடுபம்பத்தினர் மண்பாண்டம் தயாரிக்கும் ெதாழிலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் காலப்போக்கில் அந்த தொழில் மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் அவலம் நீடிக்கிறது. குறிப்பாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு கொடுக்கும் உதவித்தொகையோ, உபகரணங்களோ உண்மையான மண்பாண்ட தொழில் செய்பவர்களுக்கு கிடைப்பதில்லை. அதையும் சில இடைத்தரகர்கள் வேறு நபர்களுக்கு மாற்றி கொடுத்து அரசு உதவித்தொகையை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்த தொழில் செய்யும் எங்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. 


இதனால் ஒருசிலர் தொழிலை விட்டுவிட்டு மற்ற கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தும் நிலை ஏற்படுகிறது. மண்பாண்ட தொழில் செய்யும் ஒருசிலர் அதற்கு தேவையான களிமண் எடுக்க பல கிலோ மீட்டர் தூரம் சென்றுதான் எடுத்து வர வேண்டியுள்ளது. அதுவும் பழைய தலைமுறையினர் மட்டுமே இத்தொழிலை செய்கிறார்கள். இளைய தலைமுறையினர் இந்த தொழிலை செய்வதில்லை. ஆகவே அழிவில விளிம்பில் உள்ள மண்பாண்ட தொழிலை பாதுகாக்க உபகரணங்களும், உதவித்திட்டங்களையும் வழங்கி தொழிலை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story