2 மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர் கைது
2 மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர் கைது
சரவணம்பட்டி
கோவையில் இருந்து குமரி வரை காதல் வேட்டை நடத்தி 2 மாணவிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். திருப்பதியில் தங்கியிருந்தவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
பரபரப்பான இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:---
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்
சேலம் ஆத்தூர் கெங்கவல்லி தெடாவூர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 40). அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் ஏ டூ இசட் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினார். அதில் அவர், பொதுமக்களிடம் பணம் மோசடி செய்ததால் மணிமாறன் மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு முதல் அவர் தலைமறைவானார். தொடர்ந்து மணிமாறன் போலீசில் சிக்காமல் இருந்து வந்தார்.
மாணவிக்கு டியூசன்
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் பள்ளியில் கணிதம் மற்றும் நடன ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இதற்காக அந்த பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். அப்போது மணிமாறனுக்கும், அந்த பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியின் பெற்றோருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து 11-ம் வகுப்பு படித்து வரும் தங்களது மகளுக்கு கணித பாடம் கற்றுக்கொடுக்கும்படி மணிமாறனிடம், அந்த சிறுமியின் பெற்றோர் கேட்டனர். இதையடுத்து மணிமாறன் அந்த மாணவி உள்பட சிலருக்கு டியூசன் எடுத்து வந்தார். தன்னிடம் டியூசனுக்கு வந்த அந்த 16 வயது மாணவியிடம் தனது மன்மத சேட்டையை காட்ட தொடங்கினார் மணிமாறன்.
சிறுமியை கடத்தினார்
அந்த மாணவியிடம் காதல் மொழி பேசினார். மணிமாறனின் உண்மை முகம் அறியாத அந்த 16 வயது மாணவி, ஆசை வார்த்தையில் மயங்கி மணிமாறன் விரித்த வலையில் விழுந்தார்.
ஒரு கட்டத்தில் மணிமாறன், நாம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் என்று மாணவியிடம் தெரிவித்தார். அறியா பருவத்தில் இருந்த மாணவியோ, மணிமாறனுடன் செல்வதற்கு தயாரானார். இதையடுத்து, அவரை சரவணம்பட்டியில் இருந்து மணிமாறன் கடத்தி சென்றார்.
இதனிடையே மகள் மாயமானதாக அவருடைய பெற்றோர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மணிமாறன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
குமரியில் குடித்தனம்
மேலும் மணிமாறனை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மணிமாறன் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே மணிமாறன் கொடைக்கானல், பழனி ராமநாதபுரம் மண்டபம், திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடங்களில் மாணவியுடன் சுற்றி திரிந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் போலீசார் கண்களில் சிக்காமல் தொடர்ந்து மணிமாறன் டிமிக்கி கொடுத்து வந்தார்.
பின்னர் அந்த மாணவியுடன் குமரி மாவட்டத்திற்கு மணிமாறன் சென்றார். தொடர்ந்து அவர்கள் இருவரும் சுசீந்திரத்துக்கு சென்றனர். அங்கு இருவரும் புதுமண தம்பதி என்று கூறி ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அந்த சிறுமி தனது அக்காள் மகள் என்றும், இருவரும் விரும்பி திருமணம் செய்து கொண்டோம். இது உறவினர்களுக்கு பிடிக்காததால் இங்கு தனியாக வந்து விட்டோம் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்து உள்ளார்.
கல்லூரி மாணவியையும் வீழ்த்திய காதல் மன்னன்
இந்த நிலையில் அவர்கள் இருவரும் குடியிருந்த அந்த வாடகை வீட்டின் உரிமையாளரின் மகள், அங்குள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவரின் அழகில் மயங்கிய மணிமாறன், கல்லூரி மாணவிக்கும் காதல் வலை வீச தொடங்கினார்.
கல்லூரி மாணவி ஆரம்பத்தில் அந்த 16 வயது மாணவியுடன் பழகி வந்தார். இதற்காக அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்றார். இந்த நிலையில் மணிமாறனின் காதல் வலையில் அந்த கல்லூரி மாணவியும் சிக்கினார். மணிமாறனுடன் ஏற்கனவே ஒரு பெண் இருப்பதை அறிந்தும் அந்த கல்லூரி மாணவி நெருங்கி பழகி வந்தார்.
இதனிடையே நாம் இங்கிருந்தால் வீட்டிற்கு தெரிந்து விடும். எனவே வெளியூர் சென்று விடலாம் என்று அந்த கல்லூரி மாணவியிடம் தெரிவித்தார். மேலும் செலவுக்கு பணம் தேவைப்படும் என்பதால் வீட்டில் இருக்கும் பணம், நகை உள்ளிட்டவற்றை எடுத்து வரும்படி கல்லூரி மாணவியிடம் மணிமாறன் தெரிவித்தார். இதனை நம்பிய அந்த கல்லூரி மாணவி வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்து கொண்டு வந்ததும் 3 பேரும் தலைமறைவானார்கள்.
பாலியல் பலாத்காரம்
இதற்கிடையே கல்லூரி மாணவி காணாததால் அவரின் பெற்றோர் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி சுசீந்தரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே அந்த 2 மாணவிகளையும் கடத்திய மணிமாறன் பல்வேறு இடங்களுக்கு அவர்களை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் செல்போனில் ஆபாச வீடியோக்களை காண்பித்து அதேபோன்று அந்த மாணவிகளை இருக்கும்படி கூறி உல்லாசம் அனுபவித்தார். மாணவிகள் இருவரும் புலியிடம் சிக்கிய புள்ளிமான்களை போன்று மணிமாறனின் பாலியல் வேட்டைக்கு பலியானார்கள்.
இதற்கிடையே மணிமாறனை, போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரது புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ் அச்சடித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வந்தனர்.
திருப்பதியில் கைது
இந்தநிலையில் மணிமாறன் ஆந்திரமாநிலம் திருப்பதியில் தங்கியிருப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கோவை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அருண் மேற்பார்வையில் சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு ஜெய்சங்கர், அருண், பாலசுப்ரமணியம், லட்சுமி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் திருப்பதி விரைந்தனர்.
தொடர்ந்து திருப்பதி மாருதி நகரில் தங்கியிருந்த மணிமாறனை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த 2 மாணவிகளையும் மீட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கோவைக்கு அழைத்து வந்தனர்.
மணிமாறன் மீது கடத்தல், பாலியல் பலாத்காரம், மிரட்டல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மீட்கப்பட்ட 2 மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யவும், அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் கொடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மாணவிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கடந்த 8 மாதங்களாக டிமிக்கி கொடுத்து வந்த டியூசன் ஆசிரியர் மணிமாறனை கைது செய்த தனிப்படை போலீசாரை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் பாராட்டினார்.
Related Tags :
Next Story