மாங்காடு அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை - வாலிபர் கைது


மாங்காடு அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை - வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 March 2022 7:54 PM IST (Updated: 23 March 2022 7:54 PM IST)
t-max-icont-min-icon

மாங்காடு அருகே ஆட்டோ டிரைவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் வாலிபர் கைதானார்.

பூந்தமல்லி, 

மாங்காடு, கீழ் ரகுநாதபுரம், பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் செல்வராஜ்(வயது 35). சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் பேட்டரி தீப்பிடித்து எரிவதாக இவரது நண்பர் வெற்றி(25), என்பவர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதனால் செல்வராஜ் வீட்டில் இருந்து வந்தார். இருவரும் லோடு ஆட்டோ அருகே வந்தபோது வெற்றி தண்ணீர் எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்று விட்டார். அந்த நேரத்தில் அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் 4 பேர் செல்வராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார். மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக செல்வராஜ் இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றி மீது சந்தேகம் இருந்ததால் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். மேலும் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டதில் கூலிப்படையை ஏவி செல்வராஜை கொலை செய்ததை வெற்றி ஒப்பு கொண்டார். இந்த வழக்கில் தப்பி ஒடிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story