தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
முட்புதர்கள் ஆக்கிரமிப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள சின்னேரிபாளையத்தில் இருந்து சின்னநெகமம் செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் வளர்ந்து, உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். வளைவில் திரும்பும் போது அதிலுள்ள முட்செடிகள் வாகன ஓட்டிகளின் கை கால்களை காயப்படுத்தி விடுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமித்து உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.
செல்வன், சின்னேரிபாளையம்.
சுரங்கத்தில் சிக்கும் உடல்கள்
சுல்தான்பேட்டை ஆவின் பால்குளீருட்டும் நிலையம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் செல்கிறது. அதன் அருகே சுரங்கமும் உள்ளது. இந்த வாய்க்காலில் தண்ணீர் திறக்கும்போது தவறி விழுந்து உயிரிழப்பவர்களின் உடல்கள் அடித்து வரப்பட்டு இந்த சுரங்கத்தில் சிக்கி விடுகிறது. பின்னர் பல நாட்கள் கழித்துதான் உடலை மீட்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் உடல் அழுகி துர்நாற்றம் வீசுவதால் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சுரங்கத்தில் உடல்கள் சிக்காமல் இருக்க தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
ராதா, சுல்தான்பேட்டை.
போக்குவரத்து நெரிசல்
கிணத்துக்கடவு பஸ் நிறுத்தம் பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இங்கு காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அங்கு அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே போலீசார் உடனடி நடவடிக்ைக எடுத்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் நிறுத்தி இருக்கும் வாகனங்களை அகற்ற வேண்டும்.
ஆனந்தகுமார், கிணத்துக்கடவு.
சர்வீஸ் சாலையில் விரிசல்
கோவை பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கிணத்துக்கடவில் 2½ கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் அருகே சர்வீஸ் சாலையும் உள்ளது. கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வழியாக பொள்ளாச்சி செல்லும் தார் சாலையில் பல இடங்களில் விரிசல் அடைந்து பழுதடைந்த நிலையில் இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி யடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரிசல் ஏற்பட்டு உள்ளதை சரிசெய்ய வேண்டும்.
குமரசேன், கிணத்துக்கடவு.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
சாக்கடை அடைப்பு சரிசெய்யப்பட்டது
கோவை பாலசுந்தரம் சாலையில் போலீஸ் பயிற்சி பள்ளி அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் கழிவுநீர் ஓடியது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
ரவி, கோவை.
இறைச்சி கழிவுகளால் அவதி
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே கவுசிகா நதியின் மீது பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் அருகே ஏராளமான இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இறைச்சி கழிவுகளை அகற்றுவதுடன், அங்கு இதுபோன்ற கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லியோ ஜெயராஜ், கோவை.
சாதாரண கட்டண பஸ்கள்
கோவையை அடுத்து உள்ள சோமனூருக்கு தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த பஸ்கள் அனைத்துமே சொகுசுபஸ்களாக இருப்பதால் பெண்கள், முதியோர் உள்பட அனைவருமே அதிக கட்டணம் கொடுத்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால் சாதாரண கட்டணம் கொண்ட டவுன் பஸ்களை இயக்கினால் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதுடன், ஆண்களும் அந்த பஸ்சில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும். எனவே அதிகாரிகள் அதை செய்ய முன்வர வேண்டும்.
செந்தில், சூலூர்.
தண்ணீர் வினியோகிக்க வேண்டும்
கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு ஆதிதிராவிடர் காலனியில் உப்பு தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பகுதியில் உப்பு தண்ணீர் வினியோகித்து 15 நாட்களுக்கும் மேல் ஆவதால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குடிநீருக்கும் சிரமம் ஏற்பட்டு உள்ள நிலையில் செலவுக்கு பயன்படுத்தப்படும் உப்புத்தண்ணீரும் சீராக வராததால் கஷ்டமாக உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து உப்புத்தண்ணீர் வினியோகிக்க வேண்டும்.
பிரசாந்த் குமார், பீளமேடு.
வேகத்தடை இல்லை
கோவையை அடுத்த இருகூர் பகுதியில் முக்கியமான இடங்களில் வேகத்தடை இல்லை. இதனால் இங்கு வாகனங்கள் அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ரேஷன் கடை வளைவில் திரும்பும்போது அங்கு வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால் பயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து இங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
ராஜ்குட்டி, இருகூர்.
Related Tags :
Next Story