கோவை வருமானவரி துணை கமிஷனர் உள்பட 2 பேர் கைது


கோவை வருமானவரி துணை கமிஷனர் உள்பட 2 பேர் கைது
x
கோவை வருமானவரி துணை கமிஷனர் உள்பட 2 பேர் கைது
தினத்தந்தி 23 March 2022 11:22 PM IST (Updated: 23 March 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

கோவை வருமானவரி துணை கமிஷனர் உள்பட 2 பேர் கைது

கோவை

கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தண்டபாணி. இவருக்கு ஆலந்துறை அருகே 60 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு இவர் தனது 60 ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.10 கோடிக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து விவசாய நிலம் விற்பனை மூலம் கிடைத்த வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் அப்போதைய கோவை வருமான வரித்துறை  கமிஷனரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எனது விவசாய நிலம் மாநகராட்சி எல்லையில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் உள்ளது. எனவே விவசாய நிலத்தை விற்பதன் மூலம் கிடைத்த பணத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்று தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட அப்போதைய வருமான வரித்துறை கமிஷனர், இதற்கு வருமான வரி செலுத்த தேவையில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பான பைல் முடித்துவிடாமல் நிலுவையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் கோவை வருமான வரித்துறை துணை கமிஷனர் டேனியல் ராஜ், நிலம் விற்பனை செய்த தண்டபாணியை அழைத்து வருமான வரி தொடர்பான பைல் இன்னும் நிலுவையில் உள்ளது. நீங்கள் ரூ.10 கோடியை ரொக்கமாக பெற்றுக்கொண்டதால் அதற்கு வருமான வரி விதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அப்படி வரி விதிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு இடைத்தரகர் போல் தனியார் ஆடிட்டர் கல்யாண் ஸ்ரீநாத் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தண்டபாணி ரூ.5 லட்சத்திற்கு பதிலாக ரூ.2½ லட்சம் தர ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தண்டபாணி சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் தண்டபாணியிடம் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரம் பணத்தை கொடுத்து உள்ளனர்.

இந்த பணத்தை பெற்றுக்கொண்ட பாலதண்டபாணி துணை கமிஷனர் டேனியல் ராஜ் அறிவுரையின் பேரில் ஆடிட்டர் கல்யாண் ஸ்ரீநாத் ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.2 லட்சத்திற்கு காசோலை வழங்கி உள்ளார். அப்போது மறைந்து இருந்த சி.பி.ஐ. போலீசார் துணை கமிஷனர் டேனியல் ராஜ் மற்றும் ஆடிட்டர் கல்யாண் ஸ்ரீநாத் கைது செய்தனர்.

அப்போது டேனியல் ராஜ் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் கோவை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு சென்னை அழைத்து சென்றனர். இதனிடையே துணை கமிஷனர் டேனியல் ராஜ் வீட்டில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

1 More update

Next Story