மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கம்


மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 23 March 2022 11:22 PM IST (Updated: 23 March 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே டீசல் என்ஜின் மூலம் மலைரெயில் இயக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே டீசல் என்ஜின் மூலம் மலைரெயில் இயக்கப்பட்டது. இதனை சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அழகிய மலைரெயில்
மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். மலைரெயிலில் பயணம் செய்ய உள்நாட்டு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் மலை ரெயிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
இத்தகைய சிறப்புகளை கொண்ட மலைரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயிலால் இயங்கும் நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமாகவும் இயக்கப்பட்டு வந்தது. 
டீசல் என்ஜின் மூலம் இயக்கம்
இந்த நிலையில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்டு வந்த நீராவி என்ஜின் குன்னூர் ரெயில்வே பணிமனையில் ரூ.3 லட்சம் செலவில் பொறியாளர் டி.என். சுப்பிரமணியன் தலைமையில் டீசல் என்ஜினாக மாற்றப்பட்டது. இதையடுத்து நடந்த சோதனை ஓட்டமும் வெற்றி அடைந்தது.
இதனைத்தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்ட டீசல் என்ஜின் மலைரெயிலுடன் இணைக்கப்பட்டு சேவை தொடங்கியது. இதையொட்டி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் கலந்து கொண்டு மலைரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
புத்தகம் வெளியீடு
முன்னதாக மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு வந்த சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாசுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ‘நீலகிரி மலை ெரயில் வழிகாட்டி புத்தகம்’ மற்றும் ‘மலை ரெயில் என்ஜினை பராமரிப்பதற்கான பயிற்சி கையேடு’ ஆகியவற்றை வெளியிட்டார்.
பின்னர் ரெயில் நிலைய வளாகத்தில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மை நிலையம் மற்றும் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மரக்கன்றுகள் நட்டார்
தொடர்ந்து சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் அடர் காட்டில் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சிகளில் நீலகிரி மலை ரெயில் இயக்குனர் மற்றும் முதுநிலை கோட்ட எந்திர பொறியாளர் எஸ்.வி.ராஜா, முதுநிலை கோட்ட மின்பொறியாளர் பி.கே.செல்வன், நீலகிரி மலை ரெயில் உதவி இயக்குனர் சதீஷ் சரவணன், கோட்ட பொறியாளர் கே.கே. சுப்பிரமணியம், சேலம் கோட்ட உதவி சுகாதாரத்துறை அலுவலர் குமார், கோட்ட பாதுகாப்பு அலுவலர் பிரவீன் குமார், ரெயில் நிலைய மேலாளர் பிரசன்னா, கோச் பொறியாளர் முகமது அஸ்ரப் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story