தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்பத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்
தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்பத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று விழாவில் விவசாயிகளுக்கு யோசனை வழங்கினார்கள்.
பொள்ளாச்சி
தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்பத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று விழாவில் விவசாயிகளுக்கு யோசனை வழங்கினார்கள்.
தொடக்க விழா
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்கம் மற்றும் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைந்து ஆழியாறில் தென்னை சாகுபடிக்கான பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் புகழேந்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் தென்னை விவசாயம் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தென்னை விவசாயிகள் அதன் தொழில்நுட்பத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும். இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்து தொழில் முனைவோராக மாறி பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புத்தகம் வெளியீடு
முன்னதாக தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரணீதா வரவேற்று பேசினார். விழாவில் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பிற்கான நோக்கம், அதன் பயன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சான்றிதழ் படிப்பு புத்தகம் வெளியிடப்பட்டது.
சான்றிதழ் படிப்பில 55 மாணவர்களும், பட்டயப்படிப்பில் 22 மாணவர்களும் சேர்ந்தனர். இதில் வேளாண் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குனர் ஆனந்தன், இணை பேராசிரியர் ராஜமாணிக்கம், பேராசிரியர் லதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் பேராசிரியர் மீனா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை வேளாண் மேற்பார்வையாளர் சரணவக்குமார், தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் சிவக்குமார், வினோத்குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story