விபத்து போன்று சித்தரித்து தந்தையை கொன்றது ஏன்?
விபத்து போன்று சித்தரித்து தந்தையை கொன்றது ஏன்? என்று கைதான மாணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அல்லிநகரம்:
விவசாயி கொலை
தேனி பொம்மையகவுண்டன்பட்டி பள்ளிஓடைத்தெருவை சேர்ந்தவர் ஆசையன் (வயது 43). விவசாயி. கடந்த 15-ந்தேதி அதிகாலையில் இவர், தனது விவசாய நிலத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தேனியை அடுத்த அன்னஞ்சி என்.ஜி.ஓ. காலனி அருகில் புறவழிச்சாலையில் சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதை விபத்து வழக்கு என்று அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால் விசாரணையில், பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த சிவனேசன் (28), ஆசையனின் 16 வயது மகன் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்து விட்டு விபத்து போல் நாடகமாடியது தெரியவந்தது. இதனை அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்தது.
2 பேர் கைது
இதனையடுத்து சிவனேசனையும், ஆசையனின் 16 வயது மகனாகிய பிளஸ்-1 மாணவனையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கைதான சிறுவன் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
அந்த வாக்குமூலத்தில், "எனது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. ஆனாலும் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். எனது அம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி எனது அப்பா அடிப்பார். அதை தட்டிக் கேட்ட என்னையும் தாக்கினார். இதை பொறுத்துக் கொள்ள முடியாததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக சிவனேசனிடம் பணம் கொடுப்பதாக கூறி அழைத்தேன். பின்னர் இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டி, அவர் விவசாய நிலத்துக்கு செல்லும் போது சரக்கு வேனில் சென்று மோதிவிட்டு விபத்து போன்று சித்தரித்தோம். ஆனால், போலீசார் கண்டுபிடித்து விட்டனர்" என்று கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சீர்திருத்தப் பள்ளி
கைதான 2 பேரையும் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர், சிவனேசன் தேக்கம்பட்டி சிறையிலும், சிறுவன் மதுரை சிறார் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
விவசாயியை அவருடைய மகனே திட்டம் தீட்டி கொன்ற சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story