பள்ளி மாணவிகளிடம் ஆபாச பேச்சு: யோகா ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வந்த யோகா ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் சந்தானம் (வயது 57). இவர் அந்த பள்ளி மாணவிகளை அவ்வப்போது தகாத வார்த்தைகளால் திட்டுவதும், பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆபாசமாக பேசுவதையும் வழக்கமாக கொண்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பள்ளியில் பயிலும் 9, 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் குழந்தைகள் நல வாரிய குழுவில் ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர்.
இதனடிப்படையில் குழந்தைகள் நல வாரிய குழுவினர் அளித்த புகாரின் பேரில், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகா ஆசிரியர் சந்தானத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல், 15 வயது சிறுமியை திருமுல்லைவாயல் அனுமன் நகரை சேர்ந்த சூர்யா (19) என்பவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரை ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
Related Tags :
Next Story