திருவள்ளூர் அருகே ரூ.7 கோடி அரசு நிலம் மீட்பு


திருவள்ளூர் அருகே ரூ.7 கோடி அரசு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 25 March 2022 7:47 PM IST (Updated: 25 March 2022 7:47 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்பிலான 13 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.

ஆய்வு

சென்னை ஐகோர்ட்டு ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி 356 ஏக்கரில் உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து செங்கல் சூளை, மீன் பண்ணை மற்றும் விவசாயம் செய்து உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார் அருணா, வருவாய் அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, கிராம உதவியாளர் கிரேஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈக்காடு பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மீட்பு

அப்போது அங்கு உள்ள 356 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் 150 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து செங்கல் சூலை அமைக்க 50 ஆயிரம் கற்கள் அறுத்து வைக்கப்பட்டு இருப்பதும், மீன் பண்ணை அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டு ஈக்காடு ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த செங்கல் சூளை போட வைக்கப்பட்டிருந்த கற்களை முழுவதுமாக அகற்றினார்கள். அதன் அருகே மீன் பண்ணைக்காக தோண்டப்பட்ட குட்டைகளையும், அதை சுற்றியுள்ள இரும்பு கம்பியை கொண்டு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் அகற்றினார்கள்.

இவ்வாறாக 13 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட இந்த அரசு நிலத்தின் மதிப்பு ரூ.7 கோடி ஆகும்.

மேலும் இந்த ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து ஏரி முழுவதும் நடத்தப்படும், தொடர்ந்து ஏரியை ஆக்கிரமிப்பு செய்து வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என தாசில்தார் தெரிவித்தார்.


Next Story