ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. தர்ணா
தலைஞாயிறு அருகே வண்டல் அரசு தொடக்கப்பள்ளிக்கு நிரந்தர ஆசிரியரை நியமிக்கக்கோரி நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முனபு ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாகப்பட்டினம்:
தலைஞாயிறு அருகே வண்டல் அரசு தொடக்கப்பள்ளிக்கு நிரந்தர ஆசிரியரை நியமிக்கக்கோரி நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முனபு ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தர்ணா போராட்டம்
நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. நகர செயலாளர் தங்க.கதிரவன், நகராட்சி கவுன்சிலர் கவுதமன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் நேற்று வந்தனர். தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் அங்கு வந்து அ.தி.மு.கவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
மாணவர்களின் கல்வி பாதிப்பு
தலைஞாயிறு அருகே வண்டல் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 35 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு நிரந்தரமாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தார். இந்த ஆசிரியரும் கடந்த 6 மாதத்திற்கு மேலாக பள்ளிக்கு சரிவர வருவதில்லை. தற்காலிகமாக ஒரு ஆசிரியர் வந்து கொண்டிருந்தார். அவரும் ஊதிய பிரச்சினை காரணமாக வருவதில்லை. தற்போது நிரந்தர ஆசிரியர் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
தலைஞாயிறை சுற்றி உள்ள பகுதிகளில் குறைந்த அளவில் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் உள்ள நிலையில், 35 மாணவ-மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் பாடம் நடத்துவதற்கு ஒரு ஆசிரியர்கள் கூட இல்லை. பள்ளிக்கு வராமல் இருக்கும் ஆசிரியரை பணி மாற்றம் செய்ய முதன்மை கல்வி அதிகாரிக்கு அதிகாரம் இருந்தும், அவர் செய்ய மறுத்து வருகிறார்.
பரபரப்பு
இதே நிலை நீடித்தால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு செல்ல நேரிடம். பள்ளியை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே பள்ளிக்கு நிரந்தர ஆசிரியரை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். எம்.எல்.ஏ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story