பயங்கர நில அதிர்வு; கிராம மக்கள் பீதி
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பயங்கர நில அதிர்வு ஏற்பட்டதால் வீடுகளின் மேற்கூரை சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம்:
நில அதிர்வு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொன்ரங்கி கீரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் 3 முறை நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். அந்த கிராமத்தில் உள்ள பல வீடுகளில் மேற்கூரையில் இருந்த ஓடுகள் உடைந்து விழுந்தன. நில அதிர்வு ஏற்பட்டதை பொது மக்கள் உணர்ந்தனர். இதனையடுத்து கிராம மக்கள் பீதியுடன் விடிய, விடிய தூங்காமல் குடும்பத்துடன் தெருவில் ஆங்காங்கே நின்றனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இது பற்றி தகவலறிந்த பழனி ஆா்.டி.ஓ. சிவக்குமார், தாசில்தார் முத்துசாமி, திண்டுக்கல் புவியியல் மற்றும் சுரங்கத் துறை மாவட்ட உதவி புவியியலர் அஸ்வினி மற்றும் போலீசார் நேற்று காலை அந்த கிராமத்துக்கு விரைந்து சென்றனர். நில அதிர்வு குறித்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சேதமடைந்த வீடுகளின் மேற்கூரைகள், சுவரில் ஏற்பட்ட விரிசல் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இதுகுறித்து கிராம மக்களிடம் கேட்டபோது, நள்ளிரவு நேரத்தில் வெடி வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. பின்னர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மீண்டும் பயங்கர சத்தம் கேட்டது. அப்போது வீடுகளில் இருந்த பாத்திரங்கள் அசைந்தன. சில வீடுகளின் சுவரில் லேசான விரிசலும் ஏற்பட்டது. இதனால் அச்சம் அடைந்தோம் என்றனர்.
இதையடுத்து அந்த கிராமத்தில் ஏற்பட்டது நில அதிர்வா? அல்லது சுற்றுவட்டார பகுதிகளில் குவாரியில் பாறைகளுக்கு வெடி வைக்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிராமத்தில் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story