சென்னையில் சைக்கிள் திருட்டு அதிகரிப்பு
சென்னையில் சைக்கிள் பயன்பாடு அதிகரிப்பால் அதன் திருட்டு சம்பவம் அதிகரித்து உள்ளது.
சைக்கிள் பயணம்
சென்னையில் மோட்டார் வாகன பயன்பாடு ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்போதைய எந்திரமயமான வாழ்க்கையால் மக்களிடம் உடலுழைப்பு குறைந்து போனதால் உடல் பருமன், நீரழிவு, மூட்டு வலி, மாரடைப்பு போன்ற நோய்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று அமைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் உடல் பயிற்சி மீது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டு வருகிறது.
‘சைக்கிள் ஓட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது’ என்ற எண்ண ஓட்டம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது. மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்பட முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகம் பேர் சைக்கிள் ஓட்டி செல்வதை பார்க்க முடிகிறது.
சைக்கிள் மீதான மோகம்
சைக்கிள் மீதான மோகம் அதிகரிப்பால் இளைஞர்களை கவரும் விதமாக பல மாடல்களில் ‘கியர்’ சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் சைக்கிள் பயன்பாடு, விற்பனை அதிகரிப்பால், சைக்கிள் மீது சமூக விரோதிகள் பார்வை திரும்பி உள்ளது. சைக்கிள் எடை குறைவாக இருப்பதால் பூட்டியிருந்தாலும் வீடு புகுந்து எளிதில் தூக்கி சென்று விடுகிறார்கள். அந்த வகையில் மயிலாப்பூர் பகுதியில் அருண்டேல் தெரு, ஜி.என்.செட்டி தெருவில் கடந்த 2 நாட்களில் 4 விலையுயர்ந்த சைக்கிள்கள் பட்டப்பகலிலேயே திருட்டு போய் உள்ளன.
சைக்கிள் திருட்டு சம்பவம் குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில், வடமாநில இளைஞர் போன்று தோற்றமுடைய வாலிபர் ஒருவர் எந்தவித பதற்றமும் இன்றி அசால்டாக சைக்கிளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
கடைகளில் விற்பனை
திருட்டு சைக்கிள்கள் குறைந்த விலைக்கு கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி சென்னை மாதவரம் பகுதியில் 8 சைக்கிள்களை திருடிய வழக்கில் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கருணாநிதி நகர் 8-வது தெருவை சேர்ந்த சங்கர் (வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் திருட்டு சைக்கிள்களை வாங்கிய செங்குன்றம் மொண்டியம்மன் நகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சைக்கிள் வியாபாரி பால்ராஜ் (47) என்பவரும் சிக்கினார்.
சைக்கிள் திருட்டு அதிகரிப்பால் சைக்கிள் வைத்திருப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். ஆள் இல்லாத இடங்கள், வீட்டு வாசல்களில் சைக்கிளை நிறுத்த வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
Related Tags :
Next Story