காஞ்சீபுரம் அருகே 1,100 ஆண்டு கால பழமை வாய்ந்த சிலை கண்டெடுப்பு
காஞ்சீபுரம் அருகே அங்கம்பாக்கத்தில் 1,100 ஆண்டு கால பழமை வாய்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டது.
குலதெய்வம்
ஆய்வு மையத்தலைவரும் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான அஜய்குமார் காஞ்சீபுரம் அருகே அங்கம்பாக்கத்தில் 1,100 ஆண்டு கால பழமை வாய்ந்த தவ்வை சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து கூறியதாவது:-
தாய் தெய்வ வழிபாட்டில் தவ்வை வழிபாடு பல்லவர் காலத்திற்கு முன்பிருந்தே தொன்றுதொட்டு மரபில் இருந்து வந்தது. 7 கன்னியர்களில் தவ்வை குழந்தை பேறு அளிக்கும் தெய்வமாக வழிபாடு நடத்தப்பட்டு பின் தனியாக சிறப்பித்து வழிபடும் நடைமுறை ஏற்பட்டுள்ளது.
தவ்வை வழிபாடு பல்லவர் காலத்தில் உச்சத்தில் இருந்துள்ளது. சோழர் காலத்திலும் கோவில்களின் தென்மேற்கு பகுதியில் அமைத்து வழிபாடு நடத்தி வந்தனர். நந்தி வர்ம பல்லவனின் குலதெய்வமாகவும் இருந்துள்ளது.
பூமாதேவிக்கு 2 மகள்கள் இருந்தனர். ஒருவர் மூத்த தேவி, 2-வது மகள் சிறிய தேவி அதாவது ஸ்ரீதேவி என்று அழைக்கப்படுகிறாள். மூத்த தேவியே நாளடைவில் மூதேவி என்று ஆயிற்று. மூத்த தேவியான தவ்வைக்கு, ஜேஷ்டா தேவி, சேட்டா தேவி, சேட்டை, மாமுகடி, பழையோள், காக்கை கொடியாள், ஏகவேணி என பல பெயர்களில் அழைக்கப்பட்டார். ஜேஷ்டா என்றால் சமஸ்கிருதத்தில் முதல் என்று பொருள்படும். சேட் என்றால் தமிழில் பெரிய என பொருள்படும்.
கொற்றவைக்கு அடுத்தபடியாக சங்க இலக்கியங்களில் அதிகமாக பாடப்பட்ட தெய்வம் மூதேவி என்கிற தவ்வை தெய்வமாகும்.
பல்லவர் கால சிலை
திருவள்ளுவர், அவ்வையார், கம்பர் போன்ற புலவர்களும் தவ்வையை பற்றி குறிப்பிட்டுள்ளனர். தவ்வையின் மகன் குளிகன். மாந்தன் எனவும் அழைக்கப்பட்டார். மாந்தன் வடிவம் எருமை தலையுடன் காணப்படுகிறது. சங்க இலக்கியங்களில் மருததிணையில் உழுதல் தொழிலுக்கு எருமைகள் பயன்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது. இடது பக்கம் தவ்வையின் மகள் மாந்தி உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
காகத்தை கொடியாகவும் கழுதை வாகனத்தையும், தூய்மையின் அடையாளமாக துடைப்பத்தையும் கொண்டு பொதுவாக தவ்வை சிலைகள் காணப்படும்.
இங்கு கண்டெடுக்கப்பட்ட இந்த சிலையானது பிற்கால பல்லவர் கால சிலை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது பராமரிப்பின்றி வெயில் மழையில் புதரில் மண்டி கிடந்ததாலும் சிற்பத்தின் வேலைப்பாடுகள் சிதைந்து காணப்படுகிறது,
நெற்கதிரின் அடையாளம் திருமகள் அல்லது லட்சுமி என்று அழைக்கப்பட்டாள்.
தவ்வை சிலைகள் பெரும்பாலும் வயல் சார்ந்த பகுதிகளிலும் நீர்நிலை சார்ந்த பகுதிகளிலும் காணப்படுகிறது.
ஆதி தமிழனின் உரத்திற்கு பின் செழிப்பு என்ற அரிய தத்துவத்தின் வெளிப்பாடே இந்த வழிபாடு. உடலுக்கு நோய் நொடி சோம்பல் இல்லாமல் உழைக்கும் வலிமை வேண்டியும் செல்வம் வேண்டியும் இந்த தெய்வத்தை வணங்கினார்கள். வளமை தெய்வம் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக பருத்த வயிறும், செழித்த மார்புகளோடும் இந்த தெய்வத்தின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்க வேண்டும்
இப்போது அழுக்கு தேவியாக கருதப்பட்டு வருகிறார். ஆனால் அழுக்கு என்பது வயலுக்கு தேவைப்படும் உரத்தின் மூல வடிவமான மனிதன் கால்நடைகள் தாவரங்களின் கழிவை குறிப்பதாகும். அழுக்கு என்ற சொல் அழுக செய்யப்படுதல் என்ற செயல் விளக்க காரணமான பெயராகும்.
புராணத்தில் திருமால் பாற்கடலை கடைந்தபோது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூத்ததேவி என்று சொல்லப்படுகிறது.
பழமை வாய்ந்த மூத்த தேவி சிற்பத்தை தொல்பொருள் துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story