கார் மோதி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி


கார் மோதி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 28 March 2022 1:23 AM IST (Updated: 28 March 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை வந்தபோது, கார் மோதி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலியாகினர்.

பழனி: 


பாதயாத்திரை பக்தர்கள்
தஞ்சாவூர் மேலவஸ்தசாவடியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 47). அவருடைய மகன்கள் தவப்பிரியன் (15), கமலேஷ் (12). சாமிநாதனின் உறவினர் சேகரன் (42). இவர்கள், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தஞ்சாவூரில் இருந்து பழனிக்கு காரில் புறப்பட்டனர்.
வரும் வழியில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலில் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்று மாலை அங்கிருந்து பாதயாத்திரையாக பழனிக்கு செல்ல முடிவு செய்தனர். இதனால் தாங்கள் வந்த காரை, ஒட்டன்சத்திரத்திலேயே நிறுத்தினர். பின்னர் பாதயாத்திரையாக பழனி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

திண்டுக்கல்-பழனி சாலையில் சத்திரப்பட்டி பெரியபாலம் என்னுமிடத்தில், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பழனி நோக்கி சென்ற கார், அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 

 3 பேர் பலி 
இந்த விபத்தில் சாமிநாதன், அவருடைய மகன்கள் தவப்பிரியன், கமலேஷ் மற்றும் சேகரன் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டனர். 
இதில் சாமிநாதன், சேகரன் ஆகியோரை சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

கமலேஸ், தவப்பிரியன் ஆகியோர் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கமலேஷ் பரிதாபமாக இறந்தான். தவப்பிரியன், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Next Story