கோவையில் 95 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை
கோவையில் 95 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை
கோவை
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற் சங்கத்தினர் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். நேற்று, முதல் நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
மாவட்டத்தில் உள்ள 10 அரசு போக்குவரத்து பணிமனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 95 சதவீத பஸ்கள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 10 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
மாணவ - மாணவிகள் அவதி
இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைக்குச் செல்லவும் முடியாமல் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் அதிக எண்ணிக்கையில் கூட்டம் காணப்பட்டது. ஆட்டோக்கள் 40 சதவீதம் இயங்கின. கோவையில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதேபோல் கேரளாவில் இருந்து கோவைக்கு கேரள பஸ்களும் இயக்கப்படவில்லை.
இதேபோல கோவையிலிருந்து மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. வேலைநிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்றதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
எல்.ஐ.சி.ஊழியர்கள்
கோவையில் எல்.ஐ.சி ஊழியர்கள் 99 சதவீதம் பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலக நுழைவாயிலில் மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய இன்சூரன்சு ஊழியர்கள் தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், எல்ஐசி பங்குகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story