போலீஸ் குடியிருப்பு இருக்கு ஆனா இல்லீங்க

வால்பாறை போலீஸ் குடியிருப்பில் வீடுகள் இருந்தும் குடியிருக்க முடியாததால் குடியிருப்பு இருக்கு... ஆனா இல்லீங்க என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
வால்பாறை
போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு அதன் அருகிலேயே தங்கி இருக்க வசதியாக குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இங்குள்ள குடியிருப்பில் வீடுகள் இருந்தும் போலீசாருக்கு குடியிருக்க வீடு கிடைக்காததால் அவர்கள் வெளியே வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
வால்பாறை பகுதியில் வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி ஆகிய 4 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி ஆகிய 3 போலீஸ் நிலையங்களும், வால்பாறை போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் இருப்பதால் இங்கு இன்ஸ்பெக்டர்கள் இல்லை. சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.
மொத்தத்தில் இங்கு 40-க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளனர். அவர்களுக்காக பழைய மற்றும் புதிய போலீஸ் குடியிருப்பில் 31 வீடுகள் உள்ளன. இதில் 10 வீடுகளில் கதவு மற்றும் ஜன்னல்கள் உடைந்து உரிய பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது.
மாறுதலாகி சென்ற போலீசார் வீடுகளை ஒப்படைக்காததால் 8 வீடுகள் கடந்த 6 மாதமாக பூட்டிய நிலையில் இருக்கிறது. இதனால் இங்கு பணியாற்றும் போலீசார் வெளியே கூடுதல் பணம் கொடுத்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் இங்கு வீடுகள் இருக்கு ஆனா.... குடியிருக்க இல்லீங்க... என்ற நிலைதான் உள்ளது. இது குறித்து போலீசார் கூறும்போது, பராமரிப்பு இல்லாத வீடுகளை சரிசெய்ய மிகக்குறைந்த செலவுதான் ஆகும். அதுபோன்று பணிமாறுதலாகி சென்ற போலீசார் தங்கள் வீடுகளை ஒப்படைத்தால் அதை வேறு போலீசாருக்கு கொடுக்க முடியும்.
அதை செய்ய யாரும் முன்வரவில்லை. எனவே போலீஸ் உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பராமரிப்பு இல்லாத வீடுகளை பராமரிப்பதுடன், பணிமாறுதலாகி சென்றவர்களின் வீடுகளை வேறு போலீசாருக்கு வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story






