சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வனிதா தேர்வு

ஐகோர்ட்டு உத்தரவுபடி நடந்த தேர்தல் முடிவு அறிவிப்பு கூட்டத்தில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வனிதா தேர்வு செய்யப்பட்டார். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
ஐகோர்ட்டு உத்தரவுபடி நடந்த தேர்தல் முடிவு அறிவிப்பு கூட்டத்தில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வனிதா தேர்வு செய்யப்பட்டார். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி
பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தேர்தலில் 15 வார்டுகளையும் தி.மு.க. கைப்பற்றியது. கடந்த 4-ந் தேதி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. தலைவர் வேட்பாளராக ராகினி என்பவரை தி.மு.க. தலைமை அறிவித்தது. இந்த நிலையில் போட்டி வேட்பாளராக வனிதா வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது நடந்த மறைமுக தேர்தலில் வனிதா 8 வாக்குகளும், ராகினி 7 வாக்குகளும் பெற்றனர். இதில் வனிதா வெற்ற பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கிடையில் கவுன்சிலர் ராகினியின் தந்தை ஆறுச்சாமி கூட்டரங்கிற்குள் சென்று வாக்குசீட்டுக்களை பறித்து கிழித்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் ஒத்திவைப்பு
இதையடுத்து வெற்றி பெற்றதற்காக அறிவிக்கப்பட்ட சான்றிதழை வனிதாவிடம் இருந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திரும்ப வாங்கினர். இதனால் வனிதாவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து சட்ட-ஒழுங்கு பிரச்சினை காரணமாக தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் வனிதா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
முடிவுகள் அறிவிப்பு கூட்டம்
இந்த நிலையில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கினார். தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்ட கோவை ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ராணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்திற்கு கவுன்சிலர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். மேலும் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து, நுழைவு வாயிலில் செல்போனை போலீசார் வாங்கி கொண்டனர். மேலும் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் கவுன்சிலர்கள் தவிர வேறு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
தலைவராக வனிதா தேர்வு
அத்துடன் பேரூராட்சி அலுவலக சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அத்துமீறி நுழைவதை தடுக்க அலுவலகத்தை சுற்றியும் போலீசார் நிறுத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி, 11.45 மணி வரை நடைபெற்றது. கூட்டம் வீடியோ பதிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி தலைவராக வனிதாக தேர்வு செய்யப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கூட்டம் முடிந்து வந்த கவுன்சிலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ராணி கூறியதாவது:-
8 பேர் கையெழுத்து
மறைமுக தேர்தலின்போது பதிவான வீடியோ காட்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவரை தேர்வு செய்து முடிவு அறிவிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த கூட்டத்தில் 15 கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேரூராட்சி தலைவராக வனிதா தேர்வு செய்யப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
8 பேர் தீர்மான புத்தகத்தில் கையெழுத்திட்டனர். 7 பேர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்து விட்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






