காஞ்சீபுரம் அருகே மினி லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தல்; 3 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே மினி லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 March 2022 1:42 PM IST (Updated: 30 March 2022 1:42 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே மினி லாரிகளில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து 4½ டன் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் பச்சையம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குற்றப் புலனாய்வு போலீஸ் டி.ஜி.பி. ஆபாஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் போலீசார் சிறுகாவேரிபாக்கம் பச்சையம்மன் கோவில் பின்புறம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு மினி லாரியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிகளை மாற்றி கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து மூட்டைகளை சோதனை செய்ததில் 64 மூட்டைகளில் இருந்த 3 டன் 200 கிலோ ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய கடத்தியது தெரிந்தது.

இதையொட்டி ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அப்பு என்கிற இளங்கோவன் (வயது 23), கார்த்தி (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் காஞ்சீபுரம் அருகே வையாவூர் குருசேத்ரா பள்ளி எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தில் 27 மூட்டைகளில் 1 டன் 350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

ரேஷன் அரிசியினை பறிமுதல் செய்த போலீசார் இது சம்மந்தமாக வேல்பாண்டி (40) என்பவரை விசாரணை செய்தபோது ரேஷன் அரிசியை பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி காஞ்சீபுரம் பகுதியில் தங்கி வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரிந்தது. இதையொட்டி அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
1 More update

Next Story