75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்துறை பணி விளக்க கண்காட்சி நிறைவு - கலெக்டர் பங்கேற்பு

காஞ்சீபுரத்தில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்துறை விளக்க கண்காட்சியின் நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பங்கேற்றார்.
காஞ்சீபுரம்,
75-வது சுதந்திர தின விழாவையொட்டி, வீரத் தியாகிகளின் வீர பெருமிதங்களை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் "சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா" நடத்திட அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா" நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதை இந்த மாதம் 22-ந் தேதி அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
இதில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி, பாரம்பரிய நெல் கண்காட்சி மற்றும் அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த கண்காட்சி, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவியர்களின் பரதநாட்டியம், யோகா, சிலம்பம், மேடை பேச்சுகள், நாட்டுப்புற கலைஞர்களின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஒரு வார காலம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவியர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
இதில் வேளாண் துறை இணை இயக்குனர் கோல்டி பிரேமாவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கணேசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சதீஷ்பாபு, உதவி சுற்றுலா அலுவலர் சரண்யா, அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






