அரசு பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு முடிதிருத்தம்
நீளமான முடி வைத்திருந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரின் ஏற்பாட்டில் முடிதிருத்தம் செய்யப்பட்டது.
பெற்றோர்களுடன் ஆலோசனை
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் அரசு மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த வீரா என்ற வீராசாமி வெற்றி பெற்றார்.
இவர் மாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பள்ளி மாணவர்களில் பலரும் தலைமுடியை ஒழுங்காக வெட்டாமல் நீளமாக வைத்திருப்பது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டார். அப்போது ஆசிரியர், பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் பலமுறை தெரிவித்தும் மாணவர்கள் இதுபோன்று வருகின்றனர். எவ்வளவோ எடுத்து கூறியும், எந்த பலனும் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
300 மாணவர்களுக்கு முடிதிருத்தம்
இதையடுத்து மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி, பள்ளியில் படிக்கும் போது ஒழுக்கத்துடன் வளர்த்தால்தான் நல்ல நிலைக்கு வரமுடியும். இதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என்று எடுத்துக் கூறினார்.
நீங்கள் சம்மதித்தால் பள்ளி வளாகத்திலேயே முடிதிருத்தும் தொழிலாளர்களை கொண்டு முடி வெட்ட தான் உதவி செய்வதாகவும் தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவரின் முயற்சிக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு 300 மாணவர்களின் தலை முடி வெட்டப்பட்டது. இதில் ஒரு சில மாணவர்கள் முடிவெட்ட விடாமல் அடம் பிடித்தபோது, போலீசார் அவர்களை இறுக்கி பிடித்து தலை முடிகளை வெட்டினர். முடிவில், முடி திருத்தம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு குளிர்பானம் கொடுத்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதேபோன்று பல்வேறு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தலைமுடி, நீளமாக வைத்து கொண்டு சுற்றி திரிவது அதிக அளவில் இருந்து வருவதாகும், அந்தந்த பள்ளிகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
Related Tags :
Next Story