அட்டை பெட்டிக்குள் ரூ.1 கோடி வைத்து இருப்பதாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

அட்டை பெட்டிக்குள் ரூ.1 கோடி வைத்து இருப்பதாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
கோவை
அட்டை பெட்டிக்குள் ரூ.1 கோடி வைத்து இருப்பதாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது
வியாபாரி
ஈரோடு மாவட்டம் சித்தோடை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது49). இவர் உலர் பழங்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
இவருடைய மனைவி ஸ்ரீதேவி (42). இவர்களுடைய மகன் ரமணா (19).
இவர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
தொழிலை விரிவுபடுத்த ரூ.2 கோடி பணம் தேவைப்படுவதாக கூறி செந்தில்குமார், ஸ்ரீதேவி ஆகியோர் முகநூலில் (பேஸ்புக்) தங்களின் செல்போன் எண்ணை பதிவிட்டனர்.
இதை பார்த்த கோவையை சேர்ந்த 2 பேர் ஸ்ரீதேவியை தொடர்பு கொண்டு கோவை செட்டிப்பாளையத்தில் இருந்து கவுதம், மார்டின் ஆகியோர் பேசுவதாகவும், ரூ.25 லட்சம் கமிஷன் கொடுத்தால் தங்களுக்கு தெரிந்த நிதி நிறுவனங்களில் ரூ.2 கோடி கடன் வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.
இதற்கு சம்மதித்ததால் ஸ்ரீதேவியை செல்போனில் அழைத்த கவுதம் ரூ.1 கோடிதான் தயாராக உள்ளதாகவும், அதை கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்து வாங்கிச் செல்லுமாறும் கூறினார்.
உடனே ஸ்ரீதேவி, தனது மகன் ரமணாவிடம் ரூ.25 லட்சம் கொடுத்து அனுப்புகிறேன். அவரிடம் ரூ.1 கோடியை கொடுத்து விடுங்கள் என்று கூறி உள்ளார்.
அதன்படி கடந்த 25-ந் தேதி ஸ்ரீதேவி தனது மகன் ரமணா, ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேருடன் காரில் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வந்தார்.
அங்கு தயாராக நின்ற கவுதம், மார்ட்டின் ஆகியோர் ரமணாவிடம் ஒரு பெட்டியை காட்டி அதற்குள் ரூ.1 கோடி இருப்பதாக கூறி அவருடைய காருக்குள் வைத்தனர்.
இதையடுத்து ரூ.25 லட்சம் இருப்பதாக கூறி ரமணா கொடுத்த பையை வாங்கிக்கொண்டு அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அதன்பிறகு ரமணா அந்த பெட்டியை உடைத்து பார்த்த போது பணம் இல்லை.
பல்துலக்கும் பிரஷ், பேஸ்ட், காய்கறி வெட்டும் கத்திகள் ஆகியவை இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தார்.
2 பேர் கைது
மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், சம்பவம் நடந்த இடத்தில் பொருத் தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிக ளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், ஸ்ரீதேவியிடம் கவுதம் என்ற பெயரில் அறிமுகமானது கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த ஜனகன் (42), செட்டிப்பாளையத்தை சேர்ந்த மார்டின் அமல்ராஜ் (42) என்பதும் தெரிய வந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜனகன், பழைய மோட்டார் சைக்கிள்களை விற்று கொடுக்கும் தொழிலும், மார்டின் அமல்ராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர்.
கைதான ஜனகன், மார்டின் அமல்ராஜ் ஆகியோர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு
மொட்டையடித்து திரிந்தோம்
ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீதேவி ரூ.2 கோடி தேவை என்று முகநூலில் பதிவிட்டதை பார்த்து செல்போனில் தொடர்பு கொண்டோம். ரூ.25 லட்சம் கமிஷன் கொடுத்தால் ரூ.2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறினோம்.
அவர் அதை நம்பியதால், ரூ.25 லட்சம் கொடுத்து விட்டு தற்போது தயாராக உள்ள ரூ.1 கோடி பெற்றுச் செல்லுமாறு கூறினோம்.
அதன்படி கோவை வந்த அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பதால் ரூ.1 கோடியை அட்டை பெட்டியில் வைத்து காரில் வைத்து விடுவதாக ஸ்ரீதேவியிடம் கூறினோம். அந்த தகவலை அவர் தனது மகன் ரமணாவிடம் கூறினார்.
இதையடுத்து அவரின் காரில் அட்டைப்பெட்டியை வைத்து விட்டு ரூ.25 லட்சம் இருப்பதாக கூறி பையை வாங்கிக் கொண்டு தப்பி சென்றோம்.
பின்னர் அந்த பையை திறந்து பார்த்த போது அதில் ரூ.10 லட்சம் மட்டுமே இருந்தது.
அதை தலா ரூ.5 லட்சம் வீதம் பிரித்து கொண்டு கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரிந்தோம்.
எங்களை போலீசார் கண்டுபிடித்து விடாமல் இருக்க ஆனைமலைக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டோம். ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story






