திருத்தணி முருகன் கோவிலில் படிக்கட்டு அமைக்கும் பணி
திருத்தணி முருகன் கோவிலில் படிக்கட்டு அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
படிக்கட்டுகள் அமைக்கும் பணி
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று திருத்தணி முருகன் கோவில் படிக்கட்டுகள் வழியாக ஏறி வந்து மலைக்கோவிலில் மூலவர் முருக பெருமானை தரிசனம் செய்தார். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திருத்தணி முருகன் கோவிலில் உள்ள 9 நிலை கிழக்கு ராஜகோபுரத்தையும், கோவில் ரதவீதியையும் இணைக்கும் வகையில் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள படிக்கட்டுகள் அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ, சந்திரன் ஆகியோர் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருத்தணி முருகன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தங்கத்தேர் சீரமைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, புதிய வெள்ளித்தேர் தயார் செய்யும் பணியும் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெற்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும், இந்த கோவிலில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கபட வேண்டிய பணிக்கொடை ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கபடும், மலைக்கோவிலுக்கு மாற்று பாதை வேண்டுமென்ற கருத்துருவை மாவட்ட கலெக்டர் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.
குளங்கள் சீரமைப்பு
கோவில் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் புத்தாக்க பயிற்சியை ஏற்படுத்தி தருவதற்காக மலைக்கோவிலின் கீழே பிரம்மாண்டமான மண்டபத்தை கட்ட இருக்கிறோம். அதற்குண்டான பணிகளும் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல் பக்தர்கள் தங்கும் அனைத்து விடுதிகளும் புனரமைக்கின்ற பணியை வெகு விரைவில் மேற்கொள்ள இருக்கிறோம். மலைக்கோவிலுக்கு படிக்கட்டுகள் வாயிலாக பக்தர்கள் வருகிறபோது 3 இடங்களில் உள்ள சிறு குளங்கள் முழுவதுமாக சிதலமடைந்து பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் அதையும் சீரமைத்து அழகான ஒரு வடிவமைப்பு உருவாக்கி ரூ.54 லட்சம் செலவில் அந்த பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறோம்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தரிசனத்திற்காக வருகின்றபோது தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாஸ்டர் பிளான் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு 2 ஆண்டுக்குள் நிறைவேற்றும் முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருத்தணி ஆர்.டி.ஒ. சத்யா, தாசில்தார் விஜயகுமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பூபதி, கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story