15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; உதவி தலைமை ஆசிரியா் கைது


15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; உதவி தலைமை ஆசிரியா் கைது
x
தினத்தந்தி 1 April 2022 9:54 PM IST (Updated: 1 April 2022 9:54 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே வானவரெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 150 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரிய-ஆசிாியைகள் பணியாற்றி வருகின்றனர். 
இதில் உதவி தலைமை ஆசிரியராகவும், கணக்கு ஆசிாியராகவும் கள்ளக்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்த துளசிராமன்(வயது 58) என்பவர் பணியாற்றி வருகிறார். 

இவர் கடந்த 3 மாதங்களாக பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி பெற்றோரிடம் கூறினால் தேர்வில் தோல்வியடைய செய்வதாகவும் அவர் மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதற்கு பயந்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் சொல்லாமல் மிகுந்த மன வேதனையில் இருந்தனர். 

விடுப்பில் சென்ற ஆசிாியர்

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி உதவி தலைமை ஆசிரியர் துளசிராமன், ஒரு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுபற்றி சொல்லப்போகிறேன் என்றார். அவருடன் சேர்ந்து சக மாணவிகளும் அதுபோல் தெரிவித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைகேட்டு மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி வெளியே தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என்று உணர்ந்த உதவி தலைமை ஆசிரியர், கடந்த 12-ந்தேதி முதல் மருத்துவ விடுப்பு எடுத்து சென்று விட்டார். இந்த நிலையில் மருத்துவ விடுப்பு முடிந்து உதவி தலைமை ஆசிாியர் நேற்று பள்ளிக்கு வந்துள்ளார். 
இதுபற்றி அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து துளசிராமனிடம் பாலியல் தொல்லை கொடுத்தது சம்பந்தமாக கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் பெற்றோரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

போக்சோ சட்டத்தில் கைது

பின்னர் இதுபற்றி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் வானவரெட்டி அரசு பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் உதவி தலைமை ஆசிரியர் துளசிராமன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. 
இதையடுத்து உதவி தலைமை ஆசிரியர் துளசிராமன் மீது போக்சோ சட்டம் மற்றும் கொலை முயற்சி வழக்கில் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
ஆசிரியரே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story