பாசன கால்வாயை பாழாக்கும் பாட்டில்கள்


பாசன கால்வாயை பாழாக்கும் பாட்டில்கள்
x
தினத்தந்தி 2 April 2022 10:02 PM IST (Updated: 2 April 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே பாசன கால்வாயை பாழாக்கும் பாட்டில்களால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே பாசன கால்வாயை பாழாக்கும் பாட்டில்களால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பாசன கால்வாய்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர் கால்வாய் வழியாகவும், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அரியாபுரம், பள்ளிவிளங்கால், காரப்பட்டி, வடக்கலூர், பெரியணை ஆகிய 5 கால்வாய்கள் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆழியாறு பூங்காவிற்கு எதிரே வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் மதுபிரியர்கள் காலி மதுபாட்டில்களை கால்வாய் ஓரத்தில் வீசி சென்று விடுகின்றனர். 

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

இதன் காரணமாக கால்வாய் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. மேலும் கால்வாயில் அடித்து செல்லப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், மதுபாட்டில்களால் விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு, சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆழியாறுக்கு வருகின்றனர். 

இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் வேட்டைக்காரன்புதூர் கால்வாய் பகுதியில் மது அருந்தி விட்டு மதுபாட்டில்களை மதுபிரியர்கள் கால்வாய் ஓரத்தில் வீசி செல்கின்றனர். மேலும் குப்பைகளை கொட்டுவதால் கால்வாயில் செல்லும் தண்ணீர் மாசுப்படுகிறது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

கடும் நடவடிக்கை

கால்வாயில் வீசப்படும் காலி மதுபாட்டிகள், பிளாஸ்டிக் கழிவுகள் விவசாயிகளின் தோட்டங்களுக்கு அடித்து செல்லப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கிடையில் சிலர் கால்வாய் ஓரத்தில் செல்லும் பாதையில் மதுபாட்டில்களை உடைத்து போட்டு உள்ளனர்.
இதனால் தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 

குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், மதுபாட்டில்களால் பாசன கால்வாய் பாழாகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் ஓரத்தில் குப்பைகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story