திம்மாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்


திம்மாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 April 2022 6:01 PM IST (Updated: 3 April 2022 6:01 PM IST)
t-max-icont-min-icon

திம்மாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள திம்மாபுரம் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அங்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்று பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஆன்லைன் வர்த்தகம் தடைபட்டது. நெல் விற்க வந்த விவசாயிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் சர்வர் தற்காலிக பழுது என நினைத்து சென்றுவிட்டனர். நேற்று நெல் கொள்முதல் நிலையத்தில் ஆன்லைன் வர்த்தகம் தடை செய்யப்பட்டது. இதனால் நெல் விற்பனை செய்ய வந்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து எலப்பாக்கம்- அச்சரப்பாக்கம் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்தனர். இதனை அறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் விவசாயிகள் உள்பட அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசியபோது:-

திம்மாபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டது. வருகிற திங்கட்கிழமை காலை முதல் தொடர்ந்து செயல்படும் என்றனர்.

இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்திலேயே வைத்துள்ளனர்.


Next Story