கருணை அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்


கருணை அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 3 April 2022 9:53 PM IST (Updated: 3 April 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

கருணை அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கொரோனா தொற்று தன்னார்வ செவிலியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் கொரோனா தொற்று தன்னார்வ செவிலியர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலமாக அரசு மருத்துவமனையில் 300 செவிலியர்கள் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் முதல் பணிபுரிந்து வருகிறோம். 

தற்போது எங்களை 31.3.2022 அன்றுடன் பணி முடிவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை நிர்வாகம் மூலம் பணியில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு வந்துள்ளது. இது எங்களுக்கு மிகவும் மன வேதனையை அளித்துள்ளது. எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணி தற்காலிக பணி என்று தெரிந்தும் நாங்கள் ஏற்கனவே பார்த்து வந்த பணியை விட்டு விட்டு இந்த பணிக்கு வந்ததன் காரணம், இதுபோன்ற ஒரு பெருந்தொற்று சூழலில் நாங்கள், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்பணியை செய்ய முன்வந்தோம். எங்கள் பணியை தற்போது வரை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம். அரசுடன் இணைந்து இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளோம். எனவே எங்களது பணியின் முக்கியத்துவம் கருதியும் எங்களை தொடர்ந்து இந்த பணியிலேயே பணிபுரிய மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே பார்த்து வந்த பணியை விட்டு விட்டுள்ள சூழலில் தற்போது இந்த வேலையும் பறிபோனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். ஆகவே எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்களை பணியிலிருந்து நீக்காமல் தொடர்ந்து எங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Next Story