கிணத்துக்கடவு பகுதியில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்து
கிணத்துக்கடவு பகுதியில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அளவுக்கு அதிகமாக பாரம்
கிணத்துக்கடவு பகுதியில் சொக்கனூர், நெம்பர் 10 முத்தூர், சட்டக்கல்புதூர், வடபுதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இந்த கல் குவாரிகளில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்களில் கற்கள் ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
இவ்வாறு செல்லும் லாரிகள் குறிப்பிட்ட அளவுக்குதான் பாரம் ஏற்றிச்செல்ல வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டு உள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச்செல்லப்பட்டு வருகிறது.
அடிக்கடி விபத்துகள்
இதன் காரணமாக சிங்கையன்புதூர், சொக்கனூர், வடபுதூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் உள்ள கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
அதிக பாரத்தை ஏற்றி வரும் கனரக லாரிகள், இருசக்கர வாகனங்கள் இதர வாகனங்கள் வந்தால் அதற்கு வழி விடுவதில்லை. இதனால் இங்கு அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது.
இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள சாலைகளில் பொது மக்கள் செல்லவே பயந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-
கண்டுகொள்வது இல்லை
கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்ப கவுண்டனூர் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி அவற்றுக்கு அபராதம் விதித்தனர். இதனால் வாகனங்களில் அதிக பாரம் ஏற்றாமல் இருந்தது.
ஆனால் தற்போது அங்கு பணியில் இருக்கும் போலீசார் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்களை கண்டுகொள்வது இல்லை. மேலும் இந்த லாரிகள் அதிவேகமாக செல்வதால், இந்த பகுதியில் உள்ள சாலை விரைவில் பழுதாகி குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது.
கடும் நடவடிக்கை
எனவே விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு போலீஸ் உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து, அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச்செல்லும் லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் இந்த சோதனை சாவடியில் நேர்மையான போலீசாரை நியமித்தால்தான் இதுபோன்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்ைக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story