கோவில் அகற்றப்படுவதை தவிர்த்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்


கோவில் அகற்றப்படுவதை தவிர்த்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 April 2022 5:25 PM GMT (Updated: 4 April 2022 5:25 PM GMT)

உடுமலை அருகே ஆக்கிரமிப்பு என்று கூறி கோவில் அகற்றப்படுவதை தவிர்த்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர்
உடுமலை அருகே ஆக்கிரமிப்பு என்று கூறி கோவில் அகற்றப்படுவதை தவிர்த்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
கோவிலை அகற்ற உத்தரவு
உடுமலை பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வருகிறோம். 
எங்கள் குலதெய்வமான கருப்பராயசாமி கோவில் தென்பூதினம் கிராமம் செங்குள கரையோரம் அமைந்துள்ளது. இந்த கோவில் 150 ஆண்டுகளாக குளத்தின் மேடான பகுதியில் அமைந்துள்ளது. அதிகப்படியான மழை பெய்தாலும் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் நீர் தேங்காத பகுதியாக உள்ளது.
இந்தநிலையில் உடுமலை பி.ஏ.பி. அலுவலகத்தில் இருந்து கொடுத்த அறிக்கையில், குளக்கரையோரம் நீர்நிலை புறம்போக்கில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 
ஆனால் அங்கு குடியிருப்புகள் இல்லை. கருப்பராயசாமி கோவில் மட்டும்தான் உள்ளது. வருகிற 10-ந் தேதிக்குள் கோவிலை அகற்றுவதற்கு உடுமலை ஆர்.டி.ஓ. மற்றும் பி.ஏ.பி. பொறியாளர் ஆகியோர் காலக்கெடு விதித்துள்ளனர். எனவே கோவிலை அகற்றாமல் அதே இடத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
பாதுகாப்பு வழங்க வேண்டும்
உடுமலை பூலாங்கிணறு பகுதியை சேர்ந்த 50 வயது பெண் அளித்த மனுவில், ‘எனது கணவர் இறந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தனியாக வசித்து வருகிறேன். இந்தநிலையில் எனது பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேர், எனக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். 
இதுகுறித்து வெளியே சொன்னால் எனக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார்கள்.  இது தொடர்பாக உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
மிரட்டல்
உடுமலை கொங்கல் நகரத்தை சேர்ந்த மந்தராசலம் என்பவர் அளித்த மனுவில், ‘கொங்கல் நகர் ஊராட்சி மன்ற செயல்பாடுகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரம் கேட்டேன். 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். என்னை கொலை செய்யவும் ஆட்களை அனுப்பி பயமுறுத்துகிறார்கள். 
எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Next Story