மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம்


மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம்
x
தினத்தந்தி 6 April 2022 12:00 AM IST (Updated: 5 April 2022 8:30 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி:-

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

ராஜகோபாலசாமி கோவில்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. புகழ்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றான இக்கோவிலில் பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் உற்சவம் நடப்பது சிறப்பம்சம் ஆகும். பங்குனி மாதம் நடைபெறும் திருவிழா இந்த கோவிலின் முக்கியமான திருவிழாவாகும். 
இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து விழா நாட்களில் புன்னைவாகனம், வெள்ளி ஹம்ச வாகனம், தங்க கோவர்த்தனகிரி வாகனம், பஞ்சமுக அனுமார் வாகனம், கண்டபேரண்டபட்சி வாகனம் என பல்வேறு வாகனங்களில் ராஜகோபாலசாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 

நவநீத சேவை

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணெய் தாழி உற்சவம் 16-ம் நாள் திருவிழாவாக நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை ராஜகோபாலசாமி கையில் வெண்ணெய் குடத்துடன் தவழும் குழந்தைபோல் நவநீத சேவை அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து வீதி உலாவுக்கு புறப்பட்டார். 
ராஜகோபாலசாமி பல்லக்கு 4 வீதிகளையும் வலம் வந்தது. முடிவில் பெரியகடைத்தெரு வழியாக சென்று காந்திரோட்டில் உள்ள வெண்ணெய் தாழி மண்டபத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருளினார். 

வெண்ணெய் வீசி வழிபாடு

வீதி உலாவின்போது வழியெங்கும் பக்தர்கள் அலை அலையாக திரண்டு நின்று ராஜகோபாலசாமி மீது வெண்ணெய் வீசி வழிபட்டனர். பின்னர் மாலை செட்டி அலங்காரத்தில் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் செட்டித்தெருவில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன், திருவாரூர் குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
விழாவில் இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. பங்குனி உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக கோவிலுக்கு அருகில் உள்ள கிருஷ்ண தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 

Next Story