நீடாமங்கலம் ரெயில்வேகேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு


நீடாமங்கலம் ரெயில்வேகேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 April 2022 12:15 AM IST (Updated: 5 April 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் ரெயில்வேகேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் ரெயில்வேகேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். 

சரக்கு ரெயில்

நீடாமங்கலம் ரெயில்வே கேட் நேற்று அதிகாலை 3.10 மணிக்கு மூடப்பட்டது. அதனைத்தொடர்ந்து காலி பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரெயில் வந்தது. சரக்கு ரெயில் பெட்டிகள் 3-வது நடைமேடை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன. 
21 பெட்டிகளுடன் இருமுறை காலிப்பெட்டிகள் வந்ததால் பெட்டிகளை 3-வது நடைமேடை பகுதியில் நிறுத்தி என்ஜின் திசைமாற்றும் பணிக்கு நீண்ட நேரமானது. அதனைத்தொடர்ந்து சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதில் இருந்து பயணிகள் இறங்கியபின் அந்த ரெயில் மன்னார்குடி புறப்பட்டு சென்றது. இந்த பணிகள் முடிவடைய 1½ மணிநேரம் ஆனது. 

பொதுமக்கள் அவதி

இதனிடையே ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் தஞ்சை-நாகை நெடுஞ்சாலையின் இருபுறமும் பஸ்கள், லாரிகள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ரெயில் பயணிகள் பலர் சாலையை கடந்து செல்ல சிரமப்பட்டனர். பின்னர் 4.40 மணி அளவில் ரெயில்வே கேட் திறந்த பின்பு வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதனால் நெடுஞ்சாலை பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.  நீடாமங்கலம் நகரில் அடிக்கடி ஏற்படும் இந்த போக்குவரத்து நெருக்கடியை போக்க இருவழிச்சாலை திட்ட பணிகளை துரிதப் படுத்த வேண்டும். நீடாமங்கலம் மேம்பாலம் திட்ட பணிகளை தொடங்க வேண்டும். பழையநீடாமங்கலம் வேண்ணாற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம், பூவனூர் தட்டி பகுதியில் கோரையாற்றின் குறுக்கே கட்டப்படும் பாலப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story