பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா
தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாய்மேடு:
தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி திருவிழா
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் மாப்பிள்ளை வீரன், திருமேனி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினந்தோறும் சாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் வீதி உலா நிகழ்ச்சி நடந்து வந்தது.
இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலை மாவிளக்கு போடுதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.மேலும் நேர்த்தி கடனுக்காக மனித உடலின் பாகங்களை மண் பொம்மைகளாக வாங்கி கோவிலில் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
பக்தர்கள் மீது வாழைப்பழத்தை வீசினார்
பின்னர் மதியம் பைரவர் கோவில் பூசாரி ராதாகிருஷ்ணன், பைரவர் கோவில் இருந்து நடுக்காடு, கோவிந்தன் காடு வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்து மாப்பிள்ளை வீரன் கோவிலை அடைந்தார். பின்னர் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது வாழைப்பழத்தை வீசி திருவிழாவை தொடங்கி வைத்தார். இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
விழாவில் கோவில் செயல் அலுவலர் கணேஷ்குமார், எழுத்தர் அன்புகார்த்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story