சொத்து வரியை உயர்த்தி மக்கள் மனதில் மனச்சுமையை உருவாக்கிவிட்டனர் தி மு க மீது முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு


சொத்து வரியை உயர்த்தி மக்கள் மனதில் மனச்சுமையை உருவாக்கிவிட்டனர் தி மு க மீது  முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 April 2022 10:00 PM IST (Updated: 5 April 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

சொத்துவரியை உயர்த்தி மக்கள் மனதில் மனச்சுமையை உருவாக்கிவிட்டனர் என்று தி.மு.க. மீது முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றம்சாட்டினார்

கடலூர்

ஆர்ப்பாட்டம்

சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்தும், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலி யுறுத்தியும் கடலூர் வடக்கு, தெற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கஞ்சா விற்பனை

சொத்து வரியை உயர்த்தி மக்கள் மனதில் மனச்சுமையை தி.மு.க. உருவாக்கி விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினோம். ஆனால் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக தாலிக்கு தங்கம், திருமண உதவி திட்டத்தை ரத்து செய்து விட்டார்கள். மாணவர்களுக்கு கணினி வழங்கும் திட்டமும் செயல்படவில்லை.
தமிழக போலீஸ் டி.ஜி.பி., கஞ்சா ஒழிப்பு வாரம் கடைபிடிக்கப்படும் என்றார். ஆனால் கஞ்சா ஒழியவில்லை. கடலூர் மாவட்டத்தில் கஞ்சா போதையில் 3 பேர் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கூட எளிதில் கஞ்சா கிடைக்கிறது. டாஸ்மாக் மதுபானம் விலை உயர்வால் கஞ்சாவுக்கு இளைஞர்கள் மாறி வருகின்றனர். இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தடுக்க வேண்டும்.

நியாயமா?

தொழில் வளர்ச்சியில் நாங்கள் போட்ட பாதையில் தான் நீங்கள் செல்கிறீர்கள். அ.தி.மு.க. ஆட்சியின் போது, லூலூ மால் தமிழகத்தில் வரவிடாமல் தடுத்தோம். ஆனால் தி.மு.க.வினர் அதை கொண்டுவருவதற்கு முயற்சி செய்கிறார்கள். இந்த லூலூ மால் வந்தால் சிறுவணிகர்கள் பாதிக்கப்படுவார்கள்.  பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் அதை செய்யவில்லை. 
தற்போது தான் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், சொத்து வரியை தி.மு.க. உயர்த்துவது நியாயமா? இது மட்டுமின்றி மோட்டார் வாகன வரியும் உயர்ந்துள்ளது. ஆகவே சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை குறைக்க வேண்டும்.
 இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள்  (கிழக்கு) பாண்டியன் எம்.எல்.ஏ., சொரத்தூர் ராஜேந்திரன் (தெற்கு), மாநில அமைப்பு செயலாளரும், மாவட்ட துணை செயலாளருமான முருகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.



Next Story