தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
அடிக்கடி மின்வெட்டு
பொள்ளாச்சி அருகே உள்ள தாளக்கரை முத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். சில நேரத்தில் இரவிலும் மின்வெட்டு தொடர்வதால், முதியோர், சிறுவர்கள் தூங்க முடியாமல் அவதியடைந்து வருகிறர்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும்.
முருகன், பொள்ளாச்சி.
பிளாஸ்டிக் கழிவுகளால் அவதி
எட்டிமடை பகுதியில் உள்ள கோவை- பாலக்காடு பைபாஸ் சாலை ஓரத்தில் இருபுறமும் சரக்கு லாரிகள் நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளது. அந்த பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. சில நேரத்தில் காற்று வீசும்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் சாலையில் வந்து விழுவதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு விபத்துகள் நடக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு சாலையோரம் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்.
குமார், எட்டிமடை.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை மாநகர பகுதியில் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக கோவை காந்திபுரம் வி.ஜி.லே-அவுட் காளப்பன் வீதி கார்னர் பகுதியில் கடந்த 3 நாட்களாக குப்பைகள் மலைபோன்று குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
செந்தில்,கோவை.
பஸ்கள் இயக்கப்படுமா?
கோவை காந்திபுரத்தில் இருந்து தொண்டாமுத்தூர், நரசீபுரம், செம்மேடு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 21 ஜே, எஸ்.24, எஸ்3பி, 94, 21 டி ஆகிய டவுன்பஸ்கள் கடந்த 2 ஆண்டாக இயக்கப்படவில்லை. இதனால் இந்த பஸ்சை நம்பி பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று வந்த மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்று வந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட இந்த பஸ்களை உடனடியாக இயக்க அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும்.
பார்த்திபன், சுண்டபாளையம்.
பொதுக்கழிப்பிடம் இல்லை
கோவை குறிச்சியில் உள்ள கணேசபுரம், குளியூர், விட்டல்நகர், ருக்குமணிநகர், கல்லுக்குழி வீதி, கலைஞர் நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பொதுக்கழிப்பிடம் இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அவர்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக இங்கு பொதுக்கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும்.
பழனிசாமி, கலைஞர் நகர்.
பழுதான சாலை
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட உடுமலை-கோவை சாலையில் செஞ்சேரிமலையில் இருந்து செஞ்சேரி தனியார் கேட்டரிங் வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
முருகானந்தம், செஞ்சேரிமலை.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கோவை மாநகராட்சி 85-வது வார்டு குறிச்சி பகுதி வெங்கடாஜலபதி நகரில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் முறையாக தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி வழிந்தோடி செல்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி வருவதால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் இந்த சாக்கடையில் உள்ள அடைப்பை சரிசெய்து கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
செந்தில்குமார், குறிச்சி.
மூடாத டாஸ்மாக் கடை
பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி பஜாரில் நெல்லியாளம் ரோடு பிரியும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் காலை நேரத்தில்கூட இங்கு படுஜோராக மதுவிற்பனை நடந்து வருகிறது. இதனால் அங்கு மதுபான பிரியர்கள் பலர் குவிந்து நிற்பதால் அந்த வழியாக செல்லும் மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரியான நேரத்தில் மட்டும் டாஸ்மாக் கடை செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.
அகில், கொளப்பள்ளி.
Related Tags :
Next Story