வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் சேதமாகும் குவியாடி கண்ணாடிகள்
அனுபவம் இல்லாத டிரைவர்களால் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் குவியாடி கண்ணாடிகள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன.
வால்பாறை
அனுபவம் இல்லாத டிரைவர்களால் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் குவியாடி கண்ணாடிகள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன.
மலைப்பாதை
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக வால்பாறை திகழ்ந்து வருகிறது. இங்கு சோலையார் அணை, நீராறு, கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை பள்ளதாக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்ல மலைப்பாதை உள்ளது. வால்பாறை-பொள்ளாச்சி இடையே 65 கி.மீட்டர் சாலையில் ஆழியாறு வனத்துறையின் சோதனைச்சாவடியில் இருந்து வால்பாறை வரை 40 கிலோ மீட்டர் தூரம் கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைப்பாதையாக உள்ளது.
குவியாடி கண்ணாடிகள் சேதம்
இந்த மலைப்பாதை சாலையில் வால்பாறை பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், தனியார், சரக்கு வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மலைப்பாதை சாலைகள் அதிக கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்துகளை தடுக்க ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள், எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரிவதற்காக வளைவுகளில் குவியாடி கண்ணாடிகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வால்பாறை பகுதிக்கு கூடுதல் பயணிகளுடன் சமவெளி பகுதியில் இயக்கப்படும் அதிக நீளம் கொண்ட சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அடிக்கடி வந்து செல்கின்றன.
உரிய அனுபவம் இல்லாத டிரைவர்கள் சுற்றுலா வாகனங்களை இயக்குவதால், கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் உள்ள குவியாடி கண்ணாடிகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் சேதம் அடைந்து வருகின்றன.
விபத்து அபாயம்
மலைப்பாதையில் எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காணும், குவியாடி கண்ணாடிகள் சேதம் அடைந்து வருவதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தடுப்புச்சுவர்களும் சேதம் அடைந்து வருகின்றன. சேதமாகும் குவியாடி கண்ணாடிகள், தடுப்புச்சுவர்கள், அறிவிப்பு பலகைகளை மாற்றுவதற்கு அதிப்படியான செலவுகள் ஏற்படுகிறது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பஸ்களை அனுபவமுள்ள டிரைவர்கள் இயக்கி வரவேண்டும். சுற்றுலா வருபவர்கள் பஸ்சின் டிரைவருக்கு மலைப்பாதையில் ஓட்டி அனுபவமுள்ளதாக என்று தெரிந்து சுற்றுலா பஸ்களில் வரவேண்டும் என்றனர்.
இதேபோல வால்பாறைக்கு வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் மிகவும் கவனமுடன் இயக்க வேண்டும் என்று போலீசார் மற்றும் வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
Related Tags :
Next Story