1,660 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்


1,660 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்
x
தினத்தந்தி 6 April 2022 10:39 PM IST (Updated: 6 April 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் 1,660 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை அமைச்சர் வழங்கினார்.

 சீர்காழி
சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் திருமண உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சமூக நலத்துறை சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் அஸ்வின்குமார் வரவேற்று பேசினார்.   விழாவில் இளைஞர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு திருமண உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார்.
1,660 பயனாளிகளுக்கு
அப்போது அவர் பேசியதாவது:-
 மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் 578 பயனாளிகளுக்கும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 431 பயனாளிகளுக்கும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 651 பயனாளிகளுக்கும் என மொத்தம் 1,660 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 79 லட்சம் மதிப்பிலான நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயனாளிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயப்பிரகாஷ், நகர்மன்ற தலைவர் துர்க்கா பரமேஸ்வரி ராஜசேகரன், துணைத்தலைவர் சுப்பராயன், பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக நல அலுவலர் சாமுண்டீஸ்வரி நன்றி கூறினார்.

Next Story