சொத்து வரியை மக்கள் மீது சுமை இல்லாத வகையில் உயர்த்த வேண்டும் தர்மபுரியில் டிடிவி தினகரன் பேட்டி


சொத்து வரியை மக்கள் மீது சுமை இல்லாத  வகையில் உயர்த்த வேண்டும் தர்மபுரியில் டிடிவி தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 6 April 2022 10:42 PM IST (Updated: 6 April 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

சொத்து வரியை மக்கள் மீது சுமை இல்லாத வகையில் உயர்த்த வேண்டும் என்று தர்மபுரியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

தர்மபுரி:
சொத்து வரியை மக்கள் மீது சுமை இல்லாத வகையில் உயர்த்த வேண்டும் என்று தர்மபுரியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
 டி.டி.வி. தினகரன்
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தர்மபுரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.ம.மு.க. மற்றும் அ.தி.மு.க. இணைப்பிற்கான சாத்தியக்கூறு ஒன்றும் தெரியவில்லை. அ.ம.மு.க.வை பொறுத்தவரை ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி அமைப்பது தான் எங்களுடைய ஒரே குறிக்கோளாக, ஒரே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். உண்மையான ஜெயலலிதா ஆட்சியை நாங்கள் உருவாக்குவோம். அ.ம.மு.க.வில் இருந்து சென்றவர்களால் எங்களுக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை. எங்களிடம் தொண்டர்கள் உள்ளனர். 
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் நான் ஆஜர் ஆக வேண்டும் என்று அமலாக்கத்துறை மூலம் சம்மன் வந்தால் நான் ஆஜராகி சந்திப்பேன். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை ஏற்றத்தை மத்திய, மாநில அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இச்செயல் இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானது. எனவே கர்நாடக அரசு அணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் இணைந்து  தடுக்க வேண்டும்.
மக்கள் மீது சுமை
முதல்-அமைச்சரின் துபாய் பயணம் காலப்போக்கில் தான் உண்மை தெரியவரும். தி.மு.க.வின் 10 மாத ஆட்சி என்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் ஆட்சியாக, மக்களை திசை திருப்பும் ஆட்சியாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் படிப்படியாக மக்கள் முன்னேறி வரும் சூழலில் தமிழக அரசு சொத்துவரியை உயர்த்தியுள்ளது சொத்தையே பறிக்கும் செயலாக உள்ளது. 
உடனடியாக சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும். அப்படித்தான் உயர்த்த வேண்டும் என்றால் மக்கள் மீது சுமை இல்லாத வகையில் உயர்த்த வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தபோது அடிக்கடி போராட்டத்தை நடத்தி வந்த தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 24-ம் புலிகேசி போல் செயல்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், சசிகலாவின் அரசியல் பயணம் குறித்து கேள்விக்கு பதிலளித்த டி.டி.வி.தினகரன், எனக்கு சித்தியாக இருந்தாலும் அவரது அரசியல் பயணம் குறித்து அவரிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என்றார். 
பேட்டியின்போது தர்மபுரி மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன், மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.ஆர்.முருகன், சேலம் மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story