சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.- அ.ம.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
சொத்து வரி உயர்வை கண்டித்து மன்னார்குடி நகரசபை கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மன்னார்குடி:-
சொத்து வரி உயர்வை கண்டித்து மன்னார்குடி நகரசபை கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மன்னார்குடி நகரசபை கூட்டம்
மன்னார்குடியில் நகரசபையின் முதல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கைலாசம் முன்னிலை வகித்தார். புதிய பஸ் நிலையம், பாதாள சாக்கடை திட்டம், நவீன டிஜிட்டல் நூலகம், நவீன உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள முதல்-அமைச்சருக்கும், பரிந்துரை செய்த உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
ஆர்.ஜி.குமார் (அ.தி.மு.க.):- மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரி சாலையில் கழிவுநீர் செல்வதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில் செல்வி (அ.ம.மு.க.):- மன்னார்குடி பஸ்நிலையத்தில் அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்களுக்கு சிலை வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பொது இடங்களில் சிலை வைப்பதற்கு தடை விதித்துள்ள நிலையில் அதனை மீறி பொது இடத்தில் சிலை வைக்க முடியுமா?
கழிவுநீர்
திருச்செல்வி (அ.ம.மு.க.):- 33-வது வார்டு பகுதி தென் வடல் 6-ம் தெரு பெருமாள் கோவில் அருகில் உள்ள பழைய பாதாளசாக்கடை சேமிப்பு கிணறு கழிவுநீரால் நிரம்பி வழிகிறது. இதை சுத்தம் செய்ய வேண்டும்.
ரவிச்சந்திரன் (தி.மு.க.):-
மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்க வீடுகள் தோறும் பக்கெட்டுகளை நகராட்சி மூலம் வழங்க வேண்டும்.
கலைவாணி (தி.மு.க.):- 29-வது வார்டு பகுதியில் அரசு பென்லன்ட்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் பழுதான கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசு மருந்து தெளிக்கும் பணி
மன்னை சோழராஜன் (தலைவர்):-
கொசுக்களை கட்டுப்படுத்த நவீன கொசுமருந்து எந்திரங்கள் வாங்கி வார்டு வாரியாக மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. தேவைப்படும் இடங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கவும், நகரில் உள்ள குளங்களை தூர்வாரி சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தால் குறைபாடுகள் உடனடியாக சீர் செய்யப்படும்.
இதேபோல் உறுப்பினர்கள் ஏ.பி.அசோகன், சிவசங்கர் உள்ளிட்டோரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், பொறியாளர் குணசேகரன், மேலாளர் மீரான் மன்சூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெளிநடப்பு
முன்னதாக சொத்து வரியை உயர்த்தி அரசு அறிவித்த அறிவிப்பை தீர்மானமாக நிறைவேற்றியபோது குறிக்கிட்ட நகரசபை அ.தி.மு.க. குழு தலைவர் ஆர்.ஜி.குமார், சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறி அவரும் மற்ற 3 அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அதனை தொடர்ந்து அ.ம.மு.க. உறுப்பினர்கள் 2 பேரும் சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
மீண்டும் சிறிது நேரத்தில் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. உறுப்பினர்கள் திரும்பி வந்து விவாதத்தில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story