கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிக்கும் ஸ்கேன் பரிசோதனை நிலைய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை-கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிக்கும் டாக்டர்கள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை நிலைய உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
நாமக்கல்:
ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசு மற்றும் தனியார் டாக்டர்களுக்கான, கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவுறுதலுக்கு பின் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவுறுதலுக்கு பின் பாலினம் குறித்து தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். நம் மாவட்டத்தில் ஆண், பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு குறைவாக உள்ளது. எனவே குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் கருக்கலைப்பு விகிதம் ஆகியவற்றின் விகிதத்தை குறைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சட்டபூர்வமான நடவடிக்கை
கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவுறுதலுக்கு பின் பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தின்படி கருவுற்ற தாய்மார் மற்றும் அவரது உறவினர்களுக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிக்கும் டாக்டர்கள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை நிலைய உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். நவீன மருத்துவத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் நமது சமுதாயம் மேம்படுவதுடன் பெண் குழந்தைகளை பேணிக்காத்து நாளைய தலைமுறையை நலமாக உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்
இந்த கூட்டத்தில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் மற்றும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி மகப்பேறு டாக்டர்கள், ஸ்கேன் சென்டர் உரிமையாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story