குமாரபாளையத்தில் மதுபோதையில் தகராறு: பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை-நண்பரிடம் போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் டாஸ்மாக் கடையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த நண்பரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
குமாரபாளையம்:
பெயிண்டர்கள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஒட்டங்கோவில் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 30). குமாரபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் கோபி (30). நண்பர்களான இவர்கள் 2 பேரும் பெயிண்டராக வேலை பார்த்து வந்தனர். நேற்று மதியம் சசிகுமார், கோபி ஆகியோர் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி, அங்கிருந்த பாரில் அருந்தி கொண்டிருந்தனர்.
மதுபோதை இருவருக்கும் தலைக்கேறிய நிலையில் அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சண்டை போட்டபடியே வெளியே வந்தனர். அங்கு சண்டை முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
குத்திக்கொலை
அப்போது ஆத்திரம் அடைந்த கோபி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென சசிகுமாரின் மார்பில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சசிகுமார் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் அவர் அங்குள்ள கடை ஒன்றின் முன்பு மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து குமாரபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன், உயிருக்கு போராடி கொண்டிருந்த சசிகுமாரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சசிகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
பரபரப்பு
இதையடுத்து போலீசார் சசிகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சசிகுமாரை கத்தியால் குத்திக்கொலை செய்த கோபியை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
குமாரபாளையத்தில் பட்டப்பகலில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story