விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது
நாடழகானந்தல் நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் ரூ.3,750 லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது செய்யப்பட்டார்.
வேட்டவலம்
நாடழகானந்தல் நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் ரூ.3,750 லஞ்சம்வாங்கிய எழுத்தர் கைது செய்யப்பட்டார்.
ரூ.95 ஆயிரத்துக்கு நெல் விற்பனை
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள காட்டுமலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன் பெருமாள் (வயது 36), விவசாயி. இவர் கடந்த 2-ந் தேதி தனது விவசாய நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட தலா 40 கிலோ எடை கொண்ட 119 நெல் மூட்டைகளை நாடழகானந்தல் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.
அங்கு குவிண்டாலுக்கு ரூ.2,015 விலை நிர்ணயம் செய்து ரூ.95 ஆயிரத்து 915-க்கு நெல் விற்பனை செய்யப்பட்டதாக எழுத்தர் மற்றும் நிலைய பொறுப்பாளர் ஏழுமலை ரசீது கொடுத்துள்ளார்.
மூட்டையை இறக்கியதற்கும் பணம் கேட்டுள்ளார். அதற்கும் பணம் கொடுத்து உள்ளார். பின்னர் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் வீதம் 119 மூட்டைக்கு பணம் வேண்டும் என்று எழுத்தர் ஏழுமலை, விவசாயி பெருமாளிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் 4-ந் தேதி நேரடி நெல்கொள்முதல் நிலையத்துக்கு பெருமாள் சென்றபோது எழுத்தர் ஏழுமலை ஒரு மூட்டைக்கு 30 ரூபாய் என 119 மூட்டைக்கு ரூ.3 ஆயிரத்து 750 லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
எழுத்தர் கைது
லஞ்சம் கொடுக்க விரும்பாத பெருமாள் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து துணைபோலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் விவசாயி பெருமாளை நாடழகானந்தல் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து, போலீசாருடன் சென்று கண்காணித்தார்.
விவசாயி பெருமாள், ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் எழுத்தர் ஏழுமலையிடம் வழங்கியபோது, மறைந்திருந்த போலீசார், ஏழுமலையை கையும் களவுமாக பிடித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story