கஞ்சி பாத்திரங்களுடன் வந்த சரக்கு ஆட்டோ போலீசாரால் விரட்டியடிப்பு


கஞ்சி பாத்திரங்களுடன் வந்த சரக்கு ஆட்டோ போலீசாரால் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 7 April 2022 1:15 AM IST (Updated: 7 April 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மணல் மாட்டுவண்டி தொழிலாளர் போராட்டத்திற்காக கஞ்சி பாத்திரங்களுடன் வந்த சரக்கு ஆட்டோ போலீசாரால் விரட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி, ஏப்.7-
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மணல் மாட்டுவண்டி தொழிலாளர் போராட்டத்திற்காக கஞ்சி பாத்திரங்களுடன் வந்த சரக்கு ஆட்டோ போலீசாரால் விரட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கஞ்சி தொட்டி போராட்டம் அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கொள்ளிடம் தாளக்குடி, மாதவபுரம் பகுதிகளில் மணல் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஆற்றுக்குள் மாட்டுவண்டி தொழிலாளர்கள் இறங்கி மணல்அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறையினர் எந்திரம் வாயிலாக அள்ளும் மணலை அளந்து கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாட்டு வண்டி மணலின் விலை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த விலை உயர்வு மற்றும் நிபந்தனைகளை மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஏற்க மறுத்தும், பழைய முறைப்படி ஆற்றுக்குள் இறங்கி மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். பழைய விலைக்கு மணல் விற்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகாமையில் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
துணை கமிஷனர் பேச்சுவார்த்தை
இதையடுத்து திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம், மலைக்கோட்டை வட்டார டயர் வண்டி மாட்டு வண்டி சங்கம், திருச்சி விவசாயிகளின் மாட்டு வண்டி சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் கஞ்சித்தொட்டி திறக்க ஆயத்தமாகினர்.
அப்போது அங்கு வந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு, உதவி போலீஸ் கமிஷனர்கள் அஜய் தங்கம், காமராஜ் ஆகியோர் கஞ்சித்தொட்டி திறக்க அனுமதி இல்லை என்றும், இது தொடர்பாக கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பிரச்சினை தீர வழிவகை செய்யப்படும். மீறி கஞ்சி தொட்டி திறந்தால் கைது செய்யப்படுவீர்கள். எனவே, சிறிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து செல்லுங்கள் என அறிவுறுத்தினர்.
கஞ்சி பாத்திரத்துடன் வந்த சரக்கு ஆட்டோ
அந்த வேளையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் திட்டமிட்டப்படி கஞ்சித்தொட்டி திறக்க தயாராக, பெரிய பாத்திரங்களில் கஞ்சி சமைத்து சரக்கு ஆட்டோவில் எடுத்து வரப்பட்டது. போலீசார் அதை கண்டதும், டிரைவரை அங்கு நிறுத்தி விடாமல், அங்கிருந்து வேகமாக ஓட்டிச்செல்லுமாறு விரட்டினர். டிரைவரும் சரக்கு ஆட்டோவை வெகு தூரத்திற்கு ஓட்டிச்சென்று விட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரங்கராஜன், தலைவர் ராமர் உள்ளிட்ட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன்னும் 10 நாட்களுக்குள் மணல் குவாரிகளை திறக்காவிட்டால், குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story