குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் அண்ணன் கழுத்தை அறுத்து கொன்ற சகோதரர்கள்
குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் அண்ணனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தாயிடம் தகராறு
சென்னை பூந்தமல்லி அடுத்த கன்டோன்மென்ட், ரைட்டர் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 40). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், மனைவியை பிரிந்து இவரது தம்பிகள் மணி (30), குமார் (35), மற்றும் தாயுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், தினமும் குடித்துவிட்டு தனது தாயை ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணேஷ் தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தம்பிகள் மணி மற்றும் குமார் ஆகிய இருவரும் வீட்டில் இருந்த கத்தி மற்றும் கத்திரிக்கோலை எடுத்து தகராறில் ஈடுபட்ட அண்ணன் கணேசின் கழுத்தில் குத்தி அறுத்துள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து துடி, துடித்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
சகோதரர்கள் கைது
இதையடுத்து சகோதரர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் தலைமையில் விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த கணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த குமார் மற்றும் மணி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் தாயை அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்ட அண்ணனை, சகோதரர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story