கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
கலைஞர் எழுதுகோல் விருது
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜுன் 3-ம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கி கவுரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விருதில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன், பாராட்டு சான்றிதழும் அடங்கும். கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தகுதிகள் பின்வருமாறு:-
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும். பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாக கொண்டிருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
30-ந் தேதிக்குள்
விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின்பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு வருகிற 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story