அனுமதியின்றி பொள்ளாச்சி பஸ் நிலைய சுற்றுச்சுவர் இடிப்பு
அனுமதியின்றி பொள்ளாச்சி பஸ் நிலைய சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் கோவை செல்லும் பஸ்கள் நிறுத்தும் பகுதியில் வடக்கு ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான கடைகள் உள்ளன. இதற்கிடையில் அந்த கடைகளுக்கு முன்பு நகராட்சி மூலம் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஒருவர் சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு இருந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் எந்தவித அனுமதியும் இல்லாமல் சுற்றுச்சுவரை இடித்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் விஷ்ணு என்பவர் மீண்டும் சுற்றுச்சுவரை கட்டி, பெயிண்ட் அடித்து கொடுப்பதாக கூறினார். இதை தொடர்ந்து அதிகாரிகள் கலைந்து சென்றனர். அதன்பிறகு அந்த இடத்தில் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்பட்டது. இதற்கிடையில் சுற்றுச்சுவரை இடித்த நபர் மீது போலீசில் புகார் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story